இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் இன்று ஆறாவது நாளாக நீடித்து வருகிறது.

சானியா மிர்சா, கபில் தேவ், ஊர்மிளா மடோன்கர், நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பிரபல விளையாட்டு வீரர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவருகின்றனர்.

இதுகுறித்து நீரஜ் சோப்ரா கூறியிருப்பது :

“நமது விளையாட்டு வீரர்கள் நீதிக்காக சாலையில் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. அவர்கள் கடினமாக உழைத்து, நம் நாட்டை பெருமைப்படுத்தியுள்ளனர். ஒரு தேசமாக, ஒவ்வொருவரின் கண்ணியத்தையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. இது ஒரு உணர்வுப்பூர்வமான பிரச்சினை. எந்தவொரு பாரபட்சமும், வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் இந்த விவகாரத்தை நாம் கையாள வேண்டும். இந்த மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

மல்யுத்த வீரர்கள் போராட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்தியாவுக்காக தங்கம் வென்ற 16 வயது வீராங்கனை உட்பட 7 பெண் வீரர்களிடம் பிரிஜ் பூஷன் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக டெல்லி காவல்துறையில் ஏப்ரல் 21ம் தேதி புகார் அளித்தனர்.

ஆனால், இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து மல்யுத்த வீரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் செவ்வாய்க்கிழமை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இந்த மனுவை தாக்கல் செய்தார். மைனர் உட்பட வீரர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டின் பேரில் எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியது – மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. இவர்கள் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம் என்று தெரிவித்திருந்தார்.