கொல்கத்தா:
கொல்கத்தாவில் நடந்த பாரத் சேம்பர் ஆஃப் காமர்ஸ் கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.
அதில் அவர் பேசுகையில், ‘‘ நான் இப்போது அருண்ஜேட்லி இருக்கும் பதவியில் இருந்திருந்தால் ராஜினாமா செய்திருக்க வேண்டும். மற்றவர்கள் எழுதி கொடுத்த பட்ஜெட்டை அவர் வாசித்துள்ளார். ஜிஎஸ்டி என்பது பிரச்னைக்குறிய குழந்தையாக மாறிவிட்டது. ஜிஎஸ்டி கட்டணங்கள் குறைக்கப்பட்டு வரும் நிலையில் அது எப்படி 67 சதவீதம் வளர்ச்சி அடையும். நிதி ஒருங்கிணைப்பில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டது. அடுத்த நிதியாண்டில் ஏற்படும் பற்றாகுறை இலக்கை எதிர்கொள்ள முடியாது.
சட்டம் அகற்றப்படாவிட்டால் திருத்தப்பட வேண்டும். இதற்கு துணை ராணுவம் பதில் கிடையாது. உள்ளூர் போலீசார் தான் அதை எதிர்கொள்ள வேண்டும். பஞ்சாப், காஷ்மீரில் போலீசாருக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும். 10 மீட்டருக்கு ஒரு துணை ராணுவத்தை நிறுத்துவது தீர்வை ஏற்படுத்தாது. 56 இஞ்ச் மார்பு இங்கே வேலை செய்யாது’’ என்றார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘10 கோடி குடும்பம் தலா ரூ. 5 லட்சம் மருத்துவ உதவி பெறும் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் மாநில அரசுகள் ஏன் 40 சதவீத பங்களிப்பை அளிக்க வேண்டும்?. அவர்களது சொந்த திட்டத்தை விட்டுவிட்டு ஏன் உங்களது திட்டத்தை செயல்படுத்த வேண்டும்?.
இது போன்ற திட்டங்கள் பாஜக ஆட்சியின் 5ம் ஆண்டில் செயல்படுத்தப்படுத்துவது பொறுப்பற்ற செயலாகும். ஒரு திட்டத்தை எந்த அரசு அறிவித்தாலும் அது பல கட்டங்களை தாண்டி செயல்பாட்டிற்கு வர பல மாதங்கள் கால அவகாசம் தேவைப்படும். இதில் எத்தனை திட்டங்களை செயல்படுத்தும் முடிவில் அரசு உள்ளது என்பது தெரியவில்லை’’ என்றார்.
‘‘தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் 6 கோடி பேருக்கு என்றனர். 30 கோடி பேர் ரூ. 1 லட்சம் வரை காப்பீடு பெறுவார்கள் என்றார்கள். இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்த ஆவணங்கள் இல்லை. நிதி ஒதுக்கீடு இல்லை. இந்த திட்டம் சத்தமில்லாமல் 4 அல்லது 5 மாதங்களில் உயிரற்றதாகிவிடும்.
10 கோடி குடும்பங்கள், 50 கோடி பேர் ரூ. 5 லட்சம் வரை காப்பீடு பெறுவார்கள் என்று அறிவித்துள்ளார்கள். எங்கிருந்து இதற்கு பணம் வரும்? என்று கேட்டால் நாங்கள் பணத்தை கண்டுபிடிப்போம் என்று கூறுகிறார்கள். இது குழந்தைகள் பிறந்தநாளில் விளையாடும் புதையல் வேட்டை கிடையாது. இந்த இலக்கை அடைய கொடூரமான வரிவிதிப்பை அமல்படுத்தி பின்னால் விழுவார்கள்’’ என்றார் ப.சிதம்பரம்.