பாட்னா

ரு கிலோ காய் விலை ரூ.1 லட்சம் என விற்கப்படும் ஹாப் ஷூட்ஸ் என்னும் தாவரம் பீகார் மாநிலத்தில் சோதனை முறையில் பயிரிடப்பட்டுள்ளது.

உலகில் மிகவும் விலை உயர்ந்த தாவரங்களில் ஒன்றான ஹாப் ஷூட் என்னும் தாவரம் 11 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் கண்டறியப்பட்டது.  இந்த தாவரம் பீருக்கு சுவையூட்டும் பொருளாகவும், அதன் பிறகு மூலிகை மருந்தாகவும் தற்போது காய்கறியாகவும் முன்னேறி உள்ளது.  இந்த காய்கள் ஒரு கிலோ ரூ.1 லட்சம் என விற்கப்படுகிறது.  இந்த செடியின் தண்டுகளில் உள்ள பொருட்கள் மனிதர்களின் உடலில் உருவாகும் புற்றுநோய்ச் செல்களை அழிக்கும் என நம்பப்படுகிறது.

இந்த தாவரத்தின் மூலம் தயாரிக்கப்படும் மருந்து ஜீரண சக்தியை அதிகரிப்பது, மன அழுத்தம் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டோருக்குக் குணம் அளிப்பது எனப் பல வகைகளில் பயனுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  மேலும் இது இரத்த சோகையையும் கட்டுக்குள் கொண்டு வருகிறது.  ஐரோப்பாவில் மிகவும் பிரபலமாக உள்ள இந்த தாவரத்தின் காயில் ஆண்டிஆக்சிடெண்ட்ஸ் நிறைய உள்ளதால் தோல் பராமரிப்பு மற்றும் இளமையாக இருக்க உதவுகிறது.

இந்த தாவரம் தற்போது பீகாரில் பயிரிடப்பட்டுள்ளது.  இதை பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் கரமிடி கிராமத்தில் வசிக்கும் அமரேஷ் சிங் என்னும் 38 வயது விவசாயி பயிரிட்டுள்ளார்.   இவர் 2012 ஆம் வருடம் செயிண்ட் கொலம்பஸ் கல்லூரியில் இண்டர்மீடியட் படிப்பை முடித்தவர் ஆவார்.  இவர் தனது நிலத்தில் 5 பாத்திகளில் இந்த செடியைப் பயிரிட்டுள்ளார்.

இது குறித்து அமரேஷ் சிங்,”சுமார் 2 மாதங்கள் முன்பு இந்த பயிர்களின் நாற்றுகளை வாரணாசியில் உள்ள இந்தியக் காய்கறிகள் ஆய்வு நிலையத்தில் இருந்து வாங்கி நட்டு வைத்தேன்.  இந்த பயிர் வளர்ப்பு நல்ல வெற்றி அடைந்து பீகார் மாநிலம் முழுவதும் பரவும் என நம்புகிறேன்.  இந்த செடியின் மலர், பழம், மற்றும் தண்டுகள் என அனைத்தும் பானம் மற்றும் பீர் தயாரிப்புக்கும் மருந்து தயாரிப்புக்கும்  பயன்படுவதால் நல்ல கிராக்கி இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.