டெல்லி: நாடு முழுவதும் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்களை உயர்த்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதனால், விரைவில் டிக்கெட் கட்டணம் உயரும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்களை அதிகரிக்க மத்திய ரயில்வே வாரியம் திட்டமிட்டு வருவதாக கடந்த ஆண்டே (2020)  ரயில்வே வாரிய தலைமை நிர்வாகி வி.கே.யாதவ்  தெரிவித்திருந்தார். அப்போது,   ரயில் நிலையங்கள் மேம்படுத்த வேண்டியுள்ளதால் பயணிகள் ரயில் கட்டணத்தையும் சரக்கு ரயில் கட்டணத்தையும் “குறைந்த அளவில் உயர்த்தலாம்’ என்று முடிவெடுத்திருப்பதாக கூறியவர்,“கட்டணங்களை, அதாவது பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்களை உயர்த்துவதற்கான வழிமுறைகளை ஆலோசித்து வருவதாக கூறியிருந்தார்.

அதுபோல,  நிதி ஆயோக் தலைமை அதிகாரி அமிதாப் காந்த்தும், இந்தியாவில் பயணிகள் ரயில் கட்டணம் மானியம் மிக அதிகம். ஆகவே சரக்கு கட்டணம், பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட வேண்டியுள்ளது என்று தெரிவித்ததுடன்,  ஏப்ரல் 2023-ல் தனியார் ரயில் சேவை தொடங்கும். அவர்கள் கட்டணங்களை சுதந்திரமாக நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. பின்னர் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ரயில் பயணிகள் கட்டணம், சரக்கு சேவை கட்டணம் மாற்றம் செய்யப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், ரயில்வே துறைக்கு ஏற்பட்டுள்ள  பொருளாதார இழப்புகளைச் சமாளிக்க சரக்கு மற்றும் பயணிகள் ரயில் கட்டணங்களை உயர்த்தும்படி ரயில்வே அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில்,  மாதாந்திர பயணச் சீட்டுகள், குறைந்த கட்டணங்கள், இலவச சேவை போன்ற பல்வேறு சலுகைகளை ரயில்வே துறை பொதுமக்களுக்கு வழங்கி வருவதால் ரயில்வே துறைக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், தற்போதைய சூழ்நிலையை சமாளிக்க  பயணிகள் மற்றும் சரக்கு ரயில் சேவைகளில் கட்டண நிர்ணயத்தை விவேகத்துடன் கண்டிப்புடன் மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். மேலும் இந்தக் கட்டண உயர்வை மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டு அமல்படுத்துவது அவசியம் என்றும் என்று கூறப்பட்டு உள்ளது.

சரக்கு, பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளதால், விரைவில் ரயில் கட்டணங்கள் உயரும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் பயணிகள் ரயில் கட்டணம்   கிமீ-க்கு 4 காசுகள் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.