அங்கோர் வாட் :
“உலக சுற்று சூழலை பாதுகாப்பதே நமது கடமையென்ற உணர்வுடன் இன்றைய இளைஞர்கள் செயல்படவேண்டும்” உலக அமைதிக்காகவும், உலக சுற்று சூழல் பாதுகாக்க வேண்டியும் 30 ஆண்டுகளில் 8 முறை உலகை வலம் வந்த கம்போடியா நாட்டில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த த.சீனுவாச ராவ் மற்றும் இரா.ஞானசேகரன் வேண்டுகோள்.
1986 ம் ஆண்டு தங்கள் முதல் பயணத்தை துவங்கிய த.சீனுவாச ராவ் மற்றும் இரா.ஞானசேகரன் இருவரும், தங்கள் பயணத்தை அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஊக்குவித்ததை பெருமையோடு நினைவுகூருகிறார்கள்.
1986 முதல் 2015 வரை 30 ஆண்டுகளில் 8 முறை உலகின் அனைத்து கண்டங்களிலும் உள்ள 120 நாடுகளை தரைவழியாக மிதிவண்டி மற்றும் மகிழுந்து பயணமாக சுமார் 10 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறார்கள்.
உலக சுற்றுச் சூழலைப் பாதுகாக்க, உலக அமைதிக்காக, அணு ஆயுத ஒழிப்பு, புவி வெப்பமயமாதலை தவிர்க்க, உலக மழைக்காடுகளைக் காக்க, அண்டார்டிகா கண்டத்தை அழிவிலிருந்து காக்க என தங்கள் பயணத்தின் ஒவ்வொரு முறையும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
ஒவ்வொரு பயணத்தின் நிறைவிலும் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று ஐ.நா.வின் பொதுச் செயலாளர்களைச் சந்தித்து இவர்களது பயண அனுபவங்களையும், உலக பிரச்சனைகளையும் அறிக்கையாக சமர்பித்து, அவர்களுடைய பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார்கள்.
இவர்களின் பயணத்தின் போது இவர்கள் சென்ற நாடுகளில் உள்ள அதிபர்களையும், மாநில ஆளுநர்களையும், நகரத் தந்தைகளையும், பல்வேறு அரசியல் மற்றும் மக்கள் தலைவர்களை சந்தித்து தங்கள் பயணத்தின் நோக்கம் குறித்து விளக்கியிருக்கிறார்கள். தமிழகத்திலும், கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்த போது சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கின்றனர்.
அமெரிக்காவின், கென்டக்கி மாநிலம், இவர்களை கவுரவிக்க, த.சீனுவாச ராவ் மற்றும் இரா.ஞானசேகரன் பெயரில் ஒருநாளை இவர்கள் தினமாக பிரகடனப்படுத்தி “Honarary Attorney General” என்று பாராட்டியது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
இந்தியா உட்பட, உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இவர்கள் பயணத்தின் போது மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மூலமாக பல இலட்சம் மரக்கன்றுகளை நட்டிருக்கின்றார்கள்.
ஐக்கிய நாடுகள் நடத்தி வரும் உலக சுற்றுச்சூழல் மாநாடுகளில் (World Earth Summit), பிரேசில் நாட்டின் ரியோ டீ ஜெனிரோ நகரத்தில் 1992-ல் நடந்த முதல் மாநாட்டிலிருந்து 2002-ல் தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்தேறிய உலகச் சுற்றுச்சூழல் மாநாட்டிலும், பின் 2009-ல் டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் நகரில் நடந்த மாநாட்டிலும் பங்கு கொண்டு உலக சுற்று சூழல் குறித்த பரப்புரைகளை உலக மக்களிடம் மேற்கொண்டிருக்கிறார்கள்.
“இளைஞர்களும், வளரும் பருவத்தினர்களும் உலக சுற்றுச்சூழல் தினமான இன்றைய தினத்தை, முக்கியமாக கருதி, உலகின் சுற்றுச்சூழலை காப்பதே தமது முக்கிய கடமையாக கொண்டு இவ்வுலகில் இயற்கைக்கும், நமது சுற்றுச் சூழலுக்கும் எவ்விதமான பாதிப்புமின்றி நடந்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி ஏற்று நடப்பதே” எங்களின் வேண்டுகோளாகும் என்று உலக சுற்றுசூழல் தினமான இன்று த.சீனுவாச ராவ் மற்றும் இரா.ஞானசேகரன் இருவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.