லண்டன்
உலகக் கோப்பை 2019 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் உஸ்மான் கவாஜா காயம் காரணமாக விலகி உள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை 2019 கிரிக்கட் போட்டிகளில் முதல் அரை இறுதிப்போட்டி வரும் 9 ஆம் தேதி இந்தியாவுக்கும் நியூஜிலாந்துக்கும் இடையில் நடைபெற உள்ளது. இரண்டாம் அரை இறுதிப் போட்டி வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் மோதுகின்றன. நான்கு அணி ரசிகர்களும் இந்த போட்டியை ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையே நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா வுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இன்னும் 3 – 4 வாரங்களுக்கு ஓய்வு தேவை என அறிவுறுத்தி உள்ளனர். அதனால் அவர் அரை இறுதிப் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
அவருக்கு பதிலாக தற்போது இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய ஏ அணியில் உள்ள மாத்யூ வேட் இணைக்கப்பட உள்ளார். ஆஸ்திரேலிய அணியில் மற்றொரு வீரரான மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் அடிபட்டுள்ளார். ஆனால் அவரை குறித்து எவ்வித முடிவும் இன்னும் அணி நிர்வாகம் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் மிட்சல் மார்ஷ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.