சென்னை
தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் சட்டப்பேரவை முதல் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் தனது உரையில் ”தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக மந்தமாக உள்ளதை காண்கிறோம். இதை மாற்றி அமைக்க அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ள உள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கிட முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதில் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டஃப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர். அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜீன் ட்ரெஸ், முன்னாள் மத்திய நிதித்துறை செயலாளர் டாக்டர் எஸ். நாராயண் ஆகிய உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.” எனத் தெரிவித்தார்.
இந்த பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் குறித்து இன்று தமிழக ரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தக் குழுவின் கீழ்க்கண்ட செயல்பாடுகள் இடம் பெற்றுள்ளன.
பொருளாதார மற்றும் சமூக கொள்கை, சமூக நீதி மற்றும் மனித மேம்பாடு தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாகப் பெண்களுக்குச் சம வாய்ப்புகளை உறுதி செய்வது மற்றும் நல்வாழ்வு தொடர்பான விஷயங்களில் பொதுவான வழிகாட்டுதல்களை வழங்குதல்.
மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பது குறித்த பரிந்துரைகளைச் செய்தல்.
மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதி நிலையை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குதல்.
மக்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்க மாநில திறனை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்குதல்.
புதிய யோசனைகள் மற்றும் வளர்ச்சிக்கான தடைகளைக் களையத் தீர்வுகளை வழங்குதல்.
முதலமைச்சர் அல்லது நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சரால் குறிப்பிடப்படும் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கையில் ஏற்படும் பிரச்சினைகளைப் பகுப்பாய்வு செய்து ஆலோசனைகளை வழங்குதல்.