கடந்த 2018ம் ஆண்டிலிருந்து இந்தியாவில், சார்ந்து வாழும் மக்கள்தொகையைக் காட்டிலும், உழைக்கும் பிரிவு மக்கள்தொகை அதிகரித்துள்ளது.
சார்ந்து வாழும் மக்கள்தொகை என்பது 14 மற்றும் அதற்கு கீழுள்ள வயதில் உள்ளவர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களைக் குறிக்கும். உழைக்கும் பிரிவினர் என்பது 15 முதல் 64 வயதிற்குட்பட்ட பிரிவினரைக் குறிக்கும்.
இந்த மக்கள்தொகை பிரிவு விகிதாச்சாரம் என்பது வரும் 2055ம் ஆண்டுவரை நிலைத்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகான ஆண்டுகளில் மக்கள்தொகை விகித நிலைமைகள் மாறலாம்.
ஜப்பான், சீனா மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள், மக்கள்தொகையில் நிகழும் உழைக்கும் பிரிவினர் அதிகரிப்பை, கடந்த காலங்களில் திறமையாகப் பயன்படுத்தியுள்ளன.
இந்த குறிப்பிடத்தக்க மாற்றமானது, குழந்தைப் பிறப்பு விகிதம் குறைவதாலேயே நிகழ்கிறது. மேலும், ஆயுள்கால நீட்டிப்பு உத்தரவாதம் உறுதிப்படுவதாலும் ஏற்படுகிறது.
மேற்கூறிய மக்கள்தொகை விகித மாறுதல் தொடர்பான முதல் அனுபவத்தைப் பெற்ற நாடு ஜப்பான். இத்தகைய நிலை, அந்நாட்டில் கடந்த 1964 முதல் 2004 வரை நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா இந்த நிலையை கடந்த 1994ம் ஆண்டு அடைந்தது. அடுத்த 16 ஆண்டுகளில் அந்த நாடு இரட்டை இலக்க வளர்ச்சியை அடைந்தது.