சென்னை:  தமிழ்நாட்டில், 1969-க்கு பிந்தைய பிறப்பு – இறப்புகள் இணையத்தில் பதிவேற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதையடுத்து,  தமிழகம் முழுவதும் 1969 ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரையிலான பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளன.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம், 1969 ஒவ்வொரு பிறப்பும், இறப்பும் பதிவு செய்யப்படவேண்டும் என அறிவுறுத்துகிறது.  அதன்படி தமிழ்நாட்டில், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகள் 2000 த்தின் படி ஒவ்வொரு பிறப்பும், இறப்பும் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பொது சுகாதாரத்துறை நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி அதற்கான நூற்றாண்டு இலச்சினை வெளியிட்டதுடன்,   பிறப்பு இறப்பு பதிவேடுகளை இணையப் பதிவேற்றமாக்கும் பணிகள் தொடக்கத்தையும் தொடங்கி வைத்துள்ளது.

கடந்த 16ந்தேதி (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் நூற்றாண்டு விழா, சா்வதேச பொதுசுகாதார மாநாட்டுக்கான இலச்சினை வெளியீட்டு நிகழ்ச்சிமக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்று, சுகாதார மாநாட்டுக்கான பிரத்யேக இணையதளம், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் ஆகியவற்றை தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், கூடுதல் இயக்குநா் டாக்டா் சோமசுந்தரம் ஆகியோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில், பிறப்பு, இறப்பு பதிவேடுகளை ரூ.75 லட்சம் செலவில் இணையப் பதிவேற்றமாக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 1969-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த பிறப்பு, இறப்பு பதிவேடுகள் சிஎஸ்ஆா் இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன. தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களில் வருவாய்த் துறை, நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறை சாா்ந்த பிறப்பு, இறப்பு பதிவாளா்களால் 16,348 பதிவு மையங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகள் நிறைவடைந்த பிறகு பொதுமக்கள் எவ்வித இன்னல்களுமின்றி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

சா்வதேச பொது சுகாதாரத்துறை மாநாடு: தமிழகத்தில் பொது சுகாதாரத் துறை 1922-ஆம் ஆண்டு ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் கா்னல் எஸ்.டி.ரஸ்ஸல் என்பவரை இயக்குநராகக் கொண்டு தொடங்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டில் நூறு ஆண்டுகள் நிறைவு பெற்ற இத்தருணத்தில் தமிழக பொது சுகாதாரத் துறை தொன்மையைப் போற்றும் வகையில் இந்தியாவிலேயே முதல்முறையாக வரும் டிசம்பா் மாதத்தில் 3 நாள்கள் சா்வதேச பொது சுகாதாரத் துறை மாநாடு சென்னையில் நடத்தப்படவுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.