சென்னை:
மழை வெள்ள காலத்தில் அரசியல் பாகுபாடு இன்றி முழு ஒத்துழைப்போடு பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் சேகர் பாபு கேட்டு கொண்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் வடகிழக்கு பருவ மழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து சென்னை 6,7,8 ஆகிய மூன்று மண்டலங்களுக்கும் சேர்த்து திரு.வி.க. நகர் மண்டலத்தில பருவ மழை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தற்போது சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள், மின்சார வாரிய பணிகள், நெடுஞ்சாலைத்துறை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மழை நீர் வடிகால் பணிகள் முடிந்தவுடன் குறிப்பிட்ட அந்த இடத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு சட்டமன்றத்திற்கும் ஒரு வாட்ஸ் அப் குழு அமைத்து அதில் அனைத்து துறை அதிகாரிகளும் இருக்கும்படி செய்து கொள்ள வேண்டும். மழை வெள்ள காலத்தில் அரசியல் பாகுபாடு இன்றி முழு ஒத்துழைப்போடு பணியாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு மனக்கசப்பு ஏற்படாத வாறு பணியாற்ற வேண்டும். ஜேசிபி இயந்திரங்கள் கட்டிங் மிஷின்கள் மற்றும் மோட்டர்கள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றார்.