சென்னை: ஆவின் நிறுவனம் டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை அறிமுகம் செய்துள்ளது. இது 90 நாட்கள் வரை கெடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம் சார்பில், பால் மற்றும் பால் பொருட்கள், இனிப்பு வகைகள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஆவின் நிறுவனம் த கொழுப்பு சத்து மிகுந்த பால், கொழுப்பு சத்து குறைந்த பால் என நீலம், பச்சை, ஆரஞ்சு, மெஜந்தா என 4 வகையான நிறம் கொண்ட பாக்கெட்டுகளில் பாலை தரம் பிரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது டிலைட் என்ற புதிய பால் வகையை அறிமுகம் செய்துள்ளது. இது பசும்பால் என்றும் குறிப்பிட்டுள்ளது.

வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தொடர் மழை மற்றும் மழை வெள்ளம் காரணமாக, பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொது மக்கள் சிரமப்படுவதை தவிர்க்க ஆவின் நிர்வாகம்,  3 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும் வகையிலான பசும்பாலை அறிமுகம் செய்துள்ளது.

500 மிலி பாக்கெட் விலை 30 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.  இந்த டிலைட் பால் குளிர்சாதன வசதி ஏதும் இல்லாமல் 90 நாட்கள் வரை சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். முன்பு இயற்கைப் பேரிடர் போன்ற காலங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்படும் மக்களுக்குப் பால் பவுடர் போன்றவை வழங்கப்படும். ஆனால் இனி டிலைட் பால் பாக்கெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் டிலைட்டில் 3.5 சதவீகிதக் கொழுப்பு இருக்கும். 0% பாக்டீரியா. வாங்கிய உடன் பாலை சூடாக்கிப் பயன்படுத்தலாம். நீண்ட தூரம் பயணம் செய்வோருக்கும் ஏற்றது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.