டெல்லி: தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்து உள்ளது. டிஜிபி பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக பள்ளிகள், கல்லூரிகளில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் மற்றும் ஓடும் ரயிலில் இருந்து பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட சம்பவங்களும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் திருப்பதிக்கு ரயிலில் சென்ற பெண் ஒருவர் பெண்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தபோது, அந்த பெட்டியில் ஆண் பயணிகள் பயணம் செய்யக் கூடாது என்ற ரயில் பயண விதிமுறைகள் இருந்தும், அதனை மீறி பயணித்த கயவர்கள் இருவர் பெண்கள் பெட்டியில் ஏறி, அதில் பயணித்து கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர். இதனால் அந்த பெண் கூச்சலிட்டவுடன், ஓடும் ரயிலிலிருந்து அப்பெண்ணை கீழே தள்ளி விட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ள நிலையில், படுகாயங்களோடு பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியம் சம்பவங்கள் குறித்தும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு, தள்ளி விடப்பட்டது தொடர்பான வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த தேசிய மகளிர் ஆணையம், ரயிலில் மகளிருக்கென ஒதுக்கப்பட்ட தனி பெட்டியில் பயணித்த பெண்ணுக்கு ஆண் பயணி ஒருவரால் பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் தமிழக டிஜிபிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுவதோடு, உரிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனவும், இவ்வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை உட்பட விரிவான விவரங்கள் அடங்கிய அறிக்கையை மூன்று நாட்களுக்குள் தேசிய மகளிர் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.