புதுடெல்லி: இந்தியாவில் நடைபெறவிருந்த பெண்கள் ஜுனியர் உலகக்கோப்பை கால்பந்து தொடர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான ‘பிபா’ ஜுனியர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவில், இந்தாண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.

இந்தியா, ஜப்பான், வடகொரியா உள்ளிட்ட 16 அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடரின் போட்டிகள், கொல்கத்தா, கவுகாத்தி, புபனேஷ்வர், நவிமும்பை மற்றும் அகமதாபாத் உள்ளிட்ட பல்வ‍ேறு இடங்களில் நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் இந்தியாவின் ஐபிஎல் உள்ளிட்ட பல விளையாட்டுத் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பெண்களுக்கான ஜுனியர் உலகக்கோப்பை கால்பந்து தொடரையும் ஒத்திவைக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

இதனையடுத்து, அந்தப் பரிந்துரையை ஏற்று இப்போட்டித் தொடரை ஒத்திவைப்பதாகவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.