லக்னோ: இந்திய பெண்கள் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியை வென்றதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் வென்றது தென்னாப்பிரிக்க பெண்கள் அணி.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது தென்னாப்பிரிக்க பெண்கள் அணி.

ஏற்கனவே 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது தென்னாப்பிரிக்க அணி. இந்நிலையில் இன்று 4வது ஒருநாள் போட்டி தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, முதலில் பெளலிங் செய்ய முடிவெடுக்கவே, களமிறங்கியது இந்திய பெண்கள் அணி.

இந்திய அணியின் பூனம் ராவத் 104 ரன்கள் அடித்து நாட்அவுட்டாக இருந்தார். ஹர்மன்பீரீத் கவுர் 54 ரன்களையும், கேப்டன் மிதாலி ராஜ் 45 ரன்களையும் எடுக்க, இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் சேர்த்தது.

பின்னர், களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில், வரிசையாக முதல் 4 வீராங்கனைகள் அரைசதம் அடித்து அசத்தினார்கள். இதனால், வெற்றியும் அவர்களின் வசமானது.

மொத்தம் 48.4 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 269 ரன்களை எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டி, வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளது. அதன்பிறகு, 2 அணிகளுக்கு இடையிலான டி-20 தொடர், மார்ச் 20ம் தேதி துவங்குகிறது.