சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இன்று  ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இது பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 4 நாட்களில் ரூ.4ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை  இன்று (வெள்ளிக்கிழமை)  வர்த்தகத்தில் மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை எட்டி சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. டிரம்ப் உலக நாடுகள் மீதான வரியை குறைத்தாலும், சீனா உடனான வர்த்தக போர் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சம் தொடர்ந்து அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் அதிகளவில் வாங்கி வருகின்றனர். இதன் காரணமாகவே தங்கம் விலை 3வது நாளாக தடாலடியாக உயர்ந்து வருகிறது.

கடந்த ஆண்டு  (2024) ரூ.55ஆயிரத்தில் இருந்து சரவன் தங்கத்தின் விலை, 2025 ஆண்டு தொடங்கியது முதல் விறுவிறுவென உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு சற்று ஏறியும் இறங்கியும் காணப்பட்ட  நிலையில், இன்று அதிபடியாக விலை உயர்ந்து,  தற்போது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185-ம், பவுனுக்கு ரூ1,480- உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.69,960- ஆக உள்ளது. தங்கம் விலையில் இது வரலாறு காணாத  புதிய உச்சம் ஆகும்.  ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8,745 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.4,160 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை உயர முக்கிய காரணமாக இருப்பது அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்தது, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்தது, மற்றும் மார்ச் மாதத்தில் அமெரிக்க நுகர்வோர் பணவீக்கம் சற்றும் எதிர்பாராத விதமாக குறைந்தது தான் இந்த விலை உயர்வு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.