சென்னை,

மிழகத்தில் கிராமசபை தீர்மானம் நிறைவேற்றினாலும் மதுக்கடையை அரசு திறக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

இது மதுவுக்கு எதிராக போராடி வரும் பெண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை தமிழக அரசு அகற்றி, அருகிலுள்ள கிராம பகுதிகளில் வைக்க முயற்சி செய்தது. இதன் காரணமாக பல இடங்களில் பொதுமக்கள் வெகுண்டெழுந்து மதுக்கடைகளை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா தூங்காவி கிராமத்தைச் சேர்ந்த டி.விக்னேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,

மதுபான கடை திறப்பதற்கு கிராமசபையில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. அதை மீறி அரசு மதுக்கடையை திறக்க முயற்சிக்கிறது என்று கூறியிருந்தார்.

இதுகுறித்த வழக்கில், சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் 9ந்தேதி அதிரடி தீர்ப்பு  கூறியிருந்தது.

அதில்,

குடியிருப்பு பகுதிகளுக்குள் மதுபான கடைகளை திறக்க தமிழக அரசுக்கு தடை விதிக்கப்படுகிறது.

தங்களது கிராமத்துக்குள் மதுபான கடை திறக்க கூடாது என்று கிராம சபைகளில் தீர்மானம் இயற்றப்பட்டால், அந்த கிராமங்களில் மதுபான கடைகளை திறக்க கூடாது.

இதுபோல உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானம் இயற்றினால், நகரம், கிராமம் ஆகிய பகுதிகளில் மதுபான கடைகளை திறக்க கூடாது.

டாஸ்மாக் மதுபான கடைகளை தங்களது பகுதிகளில் திறக்க கூடாது என்று ஜனநாயக முறையில், அமைதி வழியில் போராட்டம் நடத்தும் நபர்களை போலீசார் கைது செய்யவும் கூடாது.

அவர்கள் மீது தடியடி உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடாது.

இவ்வாறு கூறியிருந்தது. இந்த வழக்கில், மாநில அரசின் வருமானம் பாதிக்கப்படுவதாக கூறி, மதுக்கடைகளை திறக்க அனுமதி கோரியிருந்தது.

இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் அரசின் வேண்டுகோளை ஏற்று, மதுக்கடைக்கு எதிராக கிராமசபை தீர்மானம் நிறைவேற்றினாலும், மதுக்கடையை திறக்கலாம் என்று கூறி உள்ளது.

இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.