நியூஸ்பாண்ட்:

இரட்டை இலை சின்னத்திற்கு தற்போது தீபாவும் உரிமை கொண்டாடுவதன் பின்னணியில் மத்திய பாஜக அரசு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டது.  சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட ஆரம்பித்தனர் அதிமுகவினர்.

இதற்கிடையே  ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்  அறிவிக்கப்பட்டபோது இரு  தரப்பும் அதிமுக-வின் அதிகாரப்பூர்வமான இரட்டை இலையை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டன. இதனால்  தேர்தல் ஆணையம் இரட்டை இலையை தற்காலிகமாக முடக்கியது. மேலும் பணப் பட்டுவாடா தொடர்பான புகார் தொடர்பாக, ஆர்.கே.நகர். இடைத்தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.

ஆனாலும் இரு அணிகளும் இரட்டை இலையை பெற தீவிரமாக முயற்சித்து வருகின்றன. இது தொடர்பாக சசிகலா அணி தேர்தல் ஆணையத்தில் 3,10,000 பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளது. அதுபோல், ஓபிஎஸ் தரப்பும் 2,50,000 பிரமாணப்பத்திரங்களை ஏற்கனவே தாக்கல் செய்திருக்கிறது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளருமான தீபா சார்பிலும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரி, தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.  கட்சி நிர்வாகிகள் கையெழுத்திட்ட 52000 பிரமாணப் பத்திரங்கள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன.   உண்மையான அதிமுக நாங்கள் தான் என்றும்  ஜெ.தீபா பேரவை தெரிவித்துள்ளது.

இரட்டை இலைக்கான உரிமை பிரச்சினையில் திடீரென தீபா குதித்திருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தீபா, அப்போதுகூட இரட்டை இலை சின்னம் பற்றி கவலைப்படவில்லை.  அவருக்கு படகு சின்னம் ஒதுக்கப்பட்டது. அவரும் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.

தவிர அவ்வப்போது அதிமுக குறித்து பேசுவாரே தவிர, தீபாவை யாரும் முக்கியமாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில்தான் அதிமுகவின் முக்கிய பிரச்சினையான “இரட்டை இலை சின்ன” விவகாரத்தில் தலையிட்டிருக்கிறார் தீபா.

தீபாவின் திடீர் வேகத்துக்குக் காரணம், மத்திய பாஜக அரசுதான் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

இதற்கு காரணமாக சொல்லப்படுவது இதுதான்:

“தினகரன், எடப்பாடி, ஓ.பி.எஸ்…என்று அதிமுகவின் அத்தனை அணிகளும் – நபர்களும் பாஜகவுக்கு அடங்கித்தான் கிடக்கிறார்கள். ஆனாலும் மத்திய பாஜக அரசு, ஓ.பி.எஸ். மீதுதான் முழுக் கவனத்தை வைத்தது.

மன்னார்குடி குடும்பத்தை அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுக்கி, ஓ.பி.எஸ். தலைமையில் அதிமுக கட்சியையும் ஆட்சியையும் கொண்டுவர வேண்டும். பிறகு அந்த அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான் பாஜக திட்டம்.

அதற்கேற்ப…  சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் வருவதற்குள் முதல்வராக துடித்த சசிகலாவின் திட்டத்தை முறியடித்தது. அடுத்தம முதல்வர் ஆகிவிட ரூட் போட்ட தினகரனின் கனவை…. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ததின் மூலம் தவிடுபொடி ஆக்கியது. அதோடு இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக சிறையில் அடைத்தது.

இன்னொரு பக்கம் தமிழக அமைச்சர் வீட்டிலேயே வருமானவரி ரெய்டு நடத்தியது.

இத்தனை செய்தும், ஓ.பி.எஸ்ஸால் ஓர் அளவுக்கு மேல் எம்.எல்.ஏக்களை ஈர்க்க முடியவில்லை. கை விரல்கள் தாண்டி ஒருவர் மட்டுமே அவரிடம் இருக்கிறார்கள்.

சரி, ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும், கட்சியையாவது ஓ.பி.எஸ். கைப்பற்றுவார் என்று கருதியது பாஜக. ஆனால் கட்சி பொறுப்பாளர்களும் பெரிய அளவில் ஓ.பி.எஸ். பக்கம் வரவில்லை.

“ஒன்றரை கோடி அ.தி.மு.க.வினர் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்” என்று ஓ.பி.எஸ். மட்டும்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அவரது அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சரவணனின் வீடியோ வெளியானது, பா.ஜ.க. தரப்புக்கு ரொம்பவே வருத்தத்தை ஏற்படுத்தி விட்டது.

அதில் சசிகலா தரப்பு மட்டுமல்ல.. ஓ.பி.எஸ். தரப்பு எப்படிப்பட்டது என்பதும் வெளிப்பட்டுவிட்டது. (ஓ.பி.எஸ். கூட இருந்து அமைச்சராகி 500 கோடி சம்பாதிக்கணும்!)

தவிர, ஓ.பி.எஸ்ஸும் ஈ.பி.எஸ்ஸும் இணக்கமாக போய்விடவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருப்பதை உணர தவறவில்லை பாஜக.

இந்த நிலையல்தான் தீபாவின் பக்கம் தனது பார்வையை செலுத்த ஆரம்பித்திருக்கிறது பாஜக. ஏற்கெனவே மத்திய உளவுத்துறையின் “அறிவுரைகளை” அறிந்தும் அறியாமலும் கேட்டுவந்துகொண்டிருக்கிறார் தீபா.

அதோடு, பாஜகவின் அதிதீவிர ஆதரவாளரான பத்திரிகை அதிபர் மற்றும் ஆசிரிர் ஒருவர் அவ்வப்போது தீபாவுக்கு “ஆலோசனைகள்” கூறிவருகிறார்.

இந்த நிலையில்தான் ஓ.பி.எஸ்.ஸை முழுதும் கைவிட்டு, தீபா தரப்பை கையில் எடுத்துக்கொள்ள பாஜக தீர்மானித்தது.

இதன்படி, “இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி ஆவணங்களை சமர்ப்பியுங்கள்” என்று தீபாவுக்கு ஆலோசனை தரப்பட… அவரது தரப்பும் “சின்னத்துக்கான” கோதாவில் இறங்கிவிட்டது” என்று கூறப்படுகிறது.