ணவனின் பாலியல் விருப்பத்தை மனைவி மறுப்பது குற்றம் என்று மலேசிய எம்.பி. பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

குடும்ப வன்முறை தொடர்பாக மலேசியாவில் தற்போது உள்ள சட்டங்களை திருத்த அந்நாட்டு அரசு ஆலோசனை செய்தது.  இதில் கலந்துகொண்டு பேசினார், ஆளும் கட்சியான பாரிசான் நேசனல் கூட்டணியின் எம்.பி, சே மொஹமத் ஜுல்கிஃப்லை ஜுசோ.

அப்போது அவர், “’பெண்களைவிட ஆண்கள் வலிமையானவர்கள் என்று ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் உணர்வுரீதியான வன்முறைக்கு ஆண்கள் ஆளாகிறார்கள். அதாவது ஆண்களுக்கு பாலுணர்வு ஏற்படும்போது மனைவிமார்கள் மறுப்பது மிகக் கொடுமையானது. அப்போது உணர்வு ரீதியாக ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி ஆண்களை பெண்கள் துன்புறுத்துவது நடக்கிறது” என்று பேசினார்.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மை நாடான மலேஷியாவில், ஷரியா நீதிமன்றத்தில் அனுமதிபெற்று, ஆண்கள் நான்கு மனைவிகளுடன் வாழலாம். இதை மாற்றவும் ஆலோசனை செய்யப்பட்டது.

அப்போது எம்.பி. ஜுசோ, “முஸ்லிம் ஆண் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள அனுமதி மறுப்பதும் குற்றம்”  என்று பேசினார்.

இவரது பேச்சு அந்நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

 

பெண்ணுரிமை ஆர்வலரும், மலேசிய  முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹம்மதின் மகளுமான மரீனா மஹாதிரினும் எம்.பி. ஜூசோவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர், “ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதால் அவளுடைய உடலுக்கான உரிமை  ஆண்களுக்கு உண்டு என்று நினைப்பது மிகவும் பழமையான கருத்து. இது இனிமேல் நடக்காது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “உடலுறவுக்கு மறுப்பு தெரிவிக்கும் உரிமை பெண்ணுக்கு உண்டு. உடலுறவுக்கு பெண் மறுத்தால் அது தவறு, குற்றம் என்று சொல்வது அபத்தம்” என்றும் மரீனா மஹாதிர் தெரிவித்துள்ளார்.

“பாலியல் வன்கொடுமை செய்தவர்களே, பாதிக்கப்பட்டவர்களை திருமணம் செய்துக் கொள்ளலாம்” என்று எம்.பி. ஜூசே ஏப்ரல் மாதத்தில் தெரிவித்த கருத்தும் பெரும்  சர்ச்சையை  குறிப்பிடத்தக்கது.

சமூகவலைதளங்களிலும் பலர் ஜூசோவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.