கிராமசபை உத்தரவுப்படி பலாத்காரம் நடந்த இடத்தைக் காட்டும் கிராமவாசி

பாகிஸ்தான்

16 வயது இளம் பெண்ணை, பாலியல் வல்லுறவு செய்யும்படி கிராம சபை உத்தரவிட்ட அதிர்ச்சி சம்பவம் மீண்டும் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

பாகிஸ்தானில் பெரும்பாலான கிராமப்பகுதிகள் இன்னமும் காட்டுமிராண்டித்தனமான சட்டதிட்டங்களை நிறைவேற்றும் கிராம சபைகளைக் கொண்டுள்ளன.

இதில் நேற்று ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி அல்லா பாக்ஷ், செய்தி ஏஜென்சிகளிடம் தெரிவித்ததாவது:

“ஜிர்கா எனப்படும் கிராம சபை பாகிஸ்தானின் பல பகுதிகளில் செயல்படுகின்றன. இதில் ஒரு கிராம சபையில், நேற்று ஒரு புகார் வந்திருக்கிறது. 12 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என்று அப்பெண்ணின் பெற்றோர் முறையிட்டனர்.

இது குறித்து விசாரித்த கிராமசபை, பலாத்காரத்தில் ஈடுபட்ட இளைஞரின் 16 வயது தங்கை, பதிலுக்கு பலாத்காரம் செய்யப்படுவதே தீர்ப்பு” என்று கூறியது.

இதையடுத்து அந்த 16 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டாள்.

சிறுமியின் பெற்றோர் தடுத்தும் பலாத்காரம் நடந்தேறியது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். தற்போது இது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் நாட்டில் இதுபோன்று கிராமசபைகள் தீர்ப்பளிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. சமீபத்தில் மேற்கு பாகிஸ்தான் பகுதியில் இதே போன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.