இம்பால்
மணிப்பூர் மாநிலத்தில் ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பெண்கள் போராட்டம் நடத்தினர்.
கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. கலவரம் 3 மாதங்களைக் கடந்தும் ஓயவில்லை. மேலும் மணிப்பூரில் குகி பழங்குடி இனத்தைச் சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் எதிரொலித்ததோடு, மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் மணிப்பூரில் மேலும் ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் தெரியவந்தது. மே மாதம் 3-ந்தேதி நடந்த கலவரத்தின்போது சூரச்சந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான 37 வயது பெண்ணை 6 பேரைக் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தது.
இரு தினங்களுக்கு முன் பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல்துறையிடம் புகார் அளித்த பிறகு இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. மணிப்பூரில் இதனால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
நேற்று பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மணிப்பூரில் மெய்தி இன பெண்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் மேற்கு மற்றும் கிழக்கு இம்பால், பிஷ்ணுபூர், காக்சிங் மற்றும் தவுபால் ஆகிய 5 மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான மெய்தி பெண்கள் சாலைகளில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஆயுதமேந்திய போராளிகள் மற்றும் மியான்மரில் இருந்து ஊடுருவியவர்களால் பெண்களுக்கு எதிராக சொல்ல முடியாத குற்றங்கள் அரங்கேற்றப்படுவதாகக் குற்றம் சாட்டினர்.