சென்னை: மகளிர் இலவச பயணத்திற்கான பிங்க் கலரிலான பேருந்துகள் இயக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றி, தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கி வருகிறது. இதற்கு பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாநகரங்களில் வெள்ளை போர்டு அல்லது ‘சாதாரண கட்டணம்’ என்று ஒட்டப்பட்ட பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். ஆனால், அனைத்து பேருந்துகளும் ஒரே நிறத்தில் இருப்பதால், பெண்கள் அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில், பெண் பயணிகள் சாதாரண கட்டணப் பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், அந்த பேருந்தின் முன்பக்கமும், பின்பக்கமும் பிங்க் நிறத்தில் மாற்றப்படுகின்றன.
முதற்கட்டமாக சென்னையில் 60 பிங்க் நிறத்தில் மாற்றப்பட்டு உள்ளன. இந்த பேருந்துகள் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது. சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினரும் முதல்வர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் இந்த பேருந்துகளின் சேவையை தனது தொகுதியான சேப்பாக்கத்தில் தொடக்கிவைக்கிறார். இந்த பேருந்துகளில் பெண்கள் இலவசமாகவும் ஆண்கள் கட்டணம் செலுத்தியும் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.