இரவு நேரப் பணியில் ஈடுபடும் பெண் மருத்துவர்களிடம் சில்மிஷம்

Must read

 

மருத்துவ ஆலோசனைகள் பெற மருத்துவரின் கிளினிக்குகளை நாடி செல்வதை தவிர்த்து ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டிய நிலைக்கு தள்ளியது கொரோனா தொற்று பரவல்.

தொற்று பரவல் ஆரம்பிப்பதற்கு முன் ‘ப்ராக்டோ’ உள்ளிட்ட ஓரிரு ஆன்லைன் நிறுவனங்கள் மட்டுமே செயலிகள் மூலம் ஆலோசனை வழங்கி வந்தது.

தற்போது இதில் பல நிறுவனங்கள் புதிய புதிய செயலிகளுடன் களத்தில் குதித்திருக்கிறது, அதில் ‘இந்தியா புல்ஸ்’ நிறுவனத்தின் ‘தானி’ முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

இது போன்று இணையதளம் வாயிலாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ சேவை நிறுவனங்களுக்கு, இந்த ஆண்டு மே மாதம் மத்திய அரசு சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஒருவருக்கு ஒருவர் ஏற்கனவே அறிமுகமான நோயாளியும் மருத்துவரும் மட்டுமே இணையதளம் வாயிலாக மருத்துவ சிகிச்சையை தொடரமுடியும் என்று அதில் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பல நிறுவனங்கள் பின்பற்றுவதாக தெரிவதில்லை, பல செயலிகள் குறைந்த கட்டணத்தில் ஆலோசனைகள் வழங்குகின்றன, சில செயலிகள் தள்ளுபடி விலையில் பேக்கேஜ் முறைகளை வழங்குகிறது, மேலும் சில செயலிகள் புதிதாக பதிவு செய்யும் நோயாளிகளுக்கு ஒரு சில ஆலோசனைகளை இலவசமாகவும் வழங்குகிறது.

24 x 7 என்று செயல்படும் இதுபோன்ற நிறுவனங்களில் பணிபுரிய மருத்துவர்களை ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் இவர்களுக்கு மாத சம்பளமாகவோ, நோயாளிகளிடம் பெறும் கட்டணத்தில் குறிப்பிட்ட சதவீதமோ இவர்களுக்கு சம்பளமாக வழங்குகிறார்கள்.

மேலும், ஆலோசனைக்கு பின் வழங்கப்படும் ‘ப்ரிஸ்க்ரிப்ஷன்’ ஒன்றுக்கு அதில் பரிந்துரைத்திருக்கும் மருந்தின் விலையை பொறுத்து ஊக்கத்தொகையும் வழங்குகிறார்கள்.

மருந்து நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்திருக்கும் சில ஆன்லைன் மருத்துவ சேவை நிறுவனங்கள் ஆலோசனைக்குப் பின் மருந்துகளுக்கான கட்டணம் பெற்று அவற்றை வாடிக்கையாளர் வீட்டிற்கே அனுப்பி வைக்கிறது.

இந்நிலையில், தற்போது, இது போன்ற ஆன்லைன் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் மருத்துவர்களை குறிவைத்து, ஆலோசனை என்ற பெயரில், சில ஆண்கள் தங்கள் பிறப்புறுப்பில் பிரச்சனை இருப்பதாகவும், ஆண்மை சக்தி வெளியேறுவதில் சிக்கல் இருப்பதாகவும் கூறி அதனை செயல்முறையுடன் கூடிய வீடியோக்களாக அனுப்பி ஆலோசனைகள் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

பெரும்பாலும் இரவு நேரங்களில் பணியில் இருக்கும் பெண் மருத்துவர்களை குறிவைத்து இதுபோன்ற சில்மிஷத்தில் ஈடுபடும் நபர்களின் செயலி பயன்பாடு, சம்பந்தப்பட்ட சேவை நிறுவனங்களால் தடை செய்யப்படுகிறது.

அப்படி தடை செய்தாலும், தங்கள் பாலினத்தை மாற்றி வேறு வேறு பெயர்களில் பதிவு செய்து, செயலி மூலம் இதுபோன்று சில்மிஷத்தில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர், தங்களை குறிப்பிட்ட மருத்துவர் தடை செய்யும் பட்சத்தில் வேறு மருத்துவர்களை அணுகி இதுபோன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடுகின்றனர்.

இதுபோன்ற துன்புறுத்தல்களில் ஈடுபடும் சிலர், மருத்துவர்களின் சமூக வலைதள பக்கங்களின் மூலம் அவர்களை பின்தொடர்ந்து தொல்லை கொடுப்பதும் அதிகரித்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட சேவை நிறுவனங்களிடம் மட்டுமே மருத்துவர்கள் புகாரளிக்க முடியும் என்ற நிலை இருப்பதால், அரசின் வழிகாட்டு முறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிவருகின்றனர்.

More articles

Latest article