லாஸ் ஏஞ்சலஸ்:
ர இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக, ஹிலாரி கிளிண்டன்
(வயது 68) போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. இதன் மூலம், 240 ஆண்டு அமெரிக்க தேர்தல் வரலாற்றில், அதிபர் பதவிக்கு போட்டியிடும் முதல் பெண் என்ற பெருமையை,  ஹிலாரி பெற்றுள்ளார்.
அமெரிக்காவை பொறுத்தவரை, அதிபராக ஒருவர் இரண்டு முறைக்கு மேல் பதவி வகிக்க முடியாது. அதன்படி, தொடர்ந்து இரண்டாவது முறையாக, அதிபராக உள்ள, ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பராக் ஒபாமாவின் (வயது 54)  பதவிக் காலம், அடுத்த ஆண்டு ஜனவரியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும்  நவம்பர், 8ம் தேதி நடைபெற இருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள இரண்டு முக்கிய கட்சிகளான, ஜனநாயக  கட்சி மற்றும் குடியரசு கட்சியின் சார்பில், அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் முதல் கட்டத் தேர்தல் தற்போது நடக்கிறது.
குடியரசு கட்சியில், அதிபர் வேட்பாளர் ஆவதற்காக பலர் போட்டியிட்டாலும், பிரபல தொழிலதிபர் டொனால்டு டிரம்ப், (வயது 69) தொடக்கம் முதலே முன்னிலை பெற்றதால்,
மற்றவர்கள் போட்டியில் இருந்து விலகினர். ஆகவே  குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக டிரம்ப் போட்டியிடுவது உறுதியானது.
இந்நிலையில், ஜனநாயக கட்சியில், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன், பெர்னி சாண்டர்ஸ், உட்பட பலர் போட்டியிட்டார்கள்.  இந்தியாவை பூர்வீகமாக உடைய, பிரபல தொழிலதிபர் பாபி ஜிண்டால் உள்ளிட்டோர் போட்டியில் இருந்து விலகினார்கள்.
இந்த நிலையில்  நியூஜெர்சி, நியூ மெக்சிகோ, கலிபோர்னியா ஆகிய மாகாணங்களில் வென்றதன் மூலம், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக, ஹிலாரி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.
hillary-clinton-thumbs-up
கடந்த 240 ஆண்டு கால  அமெரிக்க வரலாற்றில், இதுவரை அதிபர் தேர்தலில், எந்த பெண்ணும் போட்டியிட்டதில்லை.  கடந்த, 2008ல் நடந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஒபாமாவுடன், ஹிலாரியும் கடுமையாக போட்டியிட்டார். இறுதியில் போட்டியில் இருந்து விலகி, ஒபாமாவுக்கு அவர் ஆதரவு அளித்தார். அதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார்.
கடந்த, 1919ம் ஆண்டில்தான் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது ஆனால் அதற்கு, 50 ஆண்டுகளுக்கு முன்பே, 1870ல், விக்டோரியா வுட்ஹல் என்பவர், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால், ஓட்டுரிமையே இல்லாத அவருக்கு, போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை
கடந்த, 1964ம் ஆண்டில்தான்  முதல் முறையாக அதிபர் வேட்பாளருக்கான போட்டியில், ஒரு பெண் அனுமதிக்கப்பட்டார். மார்கரெட் சேஸ் ஸ்மித் என்பவர் அதிபர் வேட்பாளருக்காக போட்டியிட்டார். ஆனால், வேட்பாளர் தேர்தலில் அவர்  வெற்றி பெறவில்லை
அவரைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட, இதுவரை, 35 பெண்கள் முயன்றுள்ளனர். ஆனால், அதிபர் வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்று, அதிபர் பதவிக்கு போட்டியிடும் முதல் பெண் என்ற பெருமையை, ஹிலாரி பெற்றுள்ளார்.
தான் போட்டியிடுவது உறுதியானதும், ஹிலாரி, “மிகப் பெரிய கனவுகளை காணும் ஒவ்வொரு இளம் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஒன்றை கூற விரும்புகிறேன். நீங்கள் எதை விரும்பினாலும், அடைய நினைத்தாலும் அதை கண்டிப்பாக எட்ட முடியும் என்று நம்புங்கள், அதிபர் பதவி உட்பட. இன்றைய நாள், உங்களை போன்ற பெண்களுக்கானது” என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.