கொல்கத்தா

ரதட்சணை பாக்கிக்காக் ஒரு பெண்ணின் சிறுநீரகத்தை அவருக்கு தெரியாமல் அவர் புகுந்த வீட்டார் விற்பனை செய்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பெண் ரீடா சர்கார் (வயது 28).   இவருக்கு இவர் வீட்டார் 12 ஆண்டுகளுக்கு முன்பு பிஸ்வஜித் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.    ரீடாவின் பெற்றோர் வறுமை காரணமாக வாக்களித்தபடி வரதட்சணையில் ரூ. 2 லட்சம் பாக்கி வைத்துள்ளனர்.    இதனால் அவரை கணவரும் புகுந்த வீட்டினரும் கொடுமை செய்து வந்துள்ளனர்.

இரு வருடங்களுக்கு முன்பு ரீடாவுக்கு கடுமையான வயிற்று வலி வந்துள்ளது.    பிஸ்வஜித் அவரை கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.   அங்கு அவருக்கு குடல் வால் வீங்கி உள்ளதாகவும் அதை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டும் என கூறப் பட்டு அதன்படி அறுவை சிகிச்சை நடந்துள்ளது.    ஆனால் அவருக்கு வயிற்று வலி மேலும் அதிகரித்துள்ளது.

ரீடா தன் கணவரிடம் தன்னை மருத்டவ மனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.   ஆனால் அவர் அதைச் செய்யாமல் ஏற்கனவே நடந்த அறுவை சிகிச்சை குறித்து வெளியே சொல்லக் கூடாது என எச்சரித்துள்ளார்.   மூன்று மாதங்களுக்கு முன் ரீடாவின் பெற்றோர்கள் அவரை வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைதுச் சென்றுள்ளனர்.   அங்கு அவருடைய வலது சிறுநீரகம் அகற்றப் பட்டுள்ளதாக கூறி உள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த ரீடா மேலும் இரு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்துக் கொண்டுள்ளார்.  அங்கும் இதே தகவல் தெரிவிக்கப்பட்டது.   அதன் பிறகு வரதட்சணை பாக்கிக்காக தனது சிறுநீரகம் விற்கப்பட்டுள்ளது தெரிந்து ரீடா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.  அந்த புகாரின் பேரில் ரீடாவின் கணவர் மற்றும் மைத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  விசாரணையில் ரீடாவின் சிறுநீரகம் சத்திஸ்கரை சேர்ந்த தொழிலதிபருக்கு ரீடாவுக்கு தெரியாமல் விற்பனை செய்ததை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

அவர்களின் மீது வரதட்சணை கொடுமை, பெண்களுக்கான கொடுமை,  உடல் உறுப்புக்கள் சட்ட விரோத விற்பனை  ஆகிய பிரிவுகள் உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.