கமதாபாத்

மாதிரி மாநிலம் என கூறப்படும் குஜராத் மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், வரதட்சணை கொலைகள் அதிகரித்து வருவதாக காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

பெண்கள் பாதுகாப்பாக வாழும் மாநிலங்களில் குஜராத் மாநிலமும் ஒன்று எனவும் மற்ற மாநிலங்களுக்கு இது ஒரு மாதிரி மாநிலமாக திகழ்வதாக பாஜக கூறி வருகிறது.   இந்நிலையில் சமீபத்தில் குஜராத் மாநில காவல்துறை மாநிலத்தில் நடைபெறும் குற்றவியல் நடவடிக்கை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.   அதில் பாஜக வின் கூற்றுக்கு நேர்மாறான தகவல்கள் உள்ளன.

அந்த அறிக்கையின்படி ”குஜராத் மாநிலத்தில் கடந்த 2017ஆம் வருடம் ஒவ்வொரு வாரமும் சராசரியாக ஒன்பது பெண்கள் பலாத்காரம் செய்யபடுகின்றனர்.   அதில் ஒருவர் அகமதாபாத் நகரில் உள்ளவர்.  வாரத்துக்கு மூன்று பெண்கள் கொடுமைப் படுத்தப் படுகின்றனர்.  அதில் ஒருவர் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் ஆவார்.    அத்துடன் பெண்கள் பெருமளவில் பலாத்காரம்,  கொடுமைக்கு உள்ளாகுதல்,  வரதட்சணை கொடுமைகள், வரதட்சணை மரணங்கள் போன்றவைக்கு ஆளாகின்றனர்.

சராசரியாக ஒவ்வொரு நாளும் சுமார் 14 பெண்கள் மேற்கூறிய கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.   இவர்களில் ஆறு பேர் பலாத்காரம் செய்யப் பட்டவர்களாக உள்ளனர்.   அதாவது நகர்ப்புறப் பகுதிகளில் பெண்கள் மீதான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.

வரதட்சணைக் கொடுமைகளால் பெண்கள் பாதிக்கப்படுவது வருடா வருடம் அதிகரித்து வருகிறது.   2016ல் இது போன்ற குற்றங்கள் 86 ஆக இருந்தது, 2017 ஆம் வருடம் 656 ஆகி உள்ளது.    அகமதாபாத் நகரில் 2016ஆம் வருடம் ஒரு குற்றம் கூட நிகழாத நிலையில் 2017ஆம் வருடம் அது 133 ஆகி உள்ளது.

குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களான அகமதாபாத், சூரத், ராஜ்கோட் மற்றும் பரோடா ஆகிய அனைத்து நகரங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.    மாநிலத்தில் சூரத் நகரில் மட்டும் 138  வரதட்சணைக் கொடுமை குற்றங்கள் பதிவாகி உள்ளன. ” என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இதற்கு மனோதத்துவ நிபுணர் சுக்லா, “இந்த குற்றங்கள் அதிகரிப்புக்கான காரணம் சரியான புரிதல் இல்லாமையே ஆகும்.  மக்களுக்கு இது பற்றிய அறிவை வளர்க்க தேவையான முயற்சிகள் செய்ய வேண்டும்.  பாலியல் கல்வியின் மூலம் அதை செய்ய முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

சமூக ஆர்வலர் மீனாட்சி ஜோஷி, “இந்த அறிக்கையில் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை மட்டுமே கூறப்பட்டுள்ளன.   ஆனால் பதியாமல் உள்ள பல நிகழ்வுகள் இந்த அறிக்கையில் வர வாய்ப்பில்லை. எனவே குற்றங்கள் இதை விட அதிகமாக இருக்கலாம்.   பெண்களுக்கான காவல் நிலையங்கள் ஒவ்வொரு பகுதியிலும் அதிகரிக்க வேண்டும்” எனக் கூறி உள்ளார்.