சென்னை

நேற்று தலைமைச் செயலகத்தில் ஒரு பெண் தனது மகன் கைதை எதிர்த்துத் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

நேற்று சென்னையில் உள்ள தமிழக தலைமைச் செயலகத்துக்கு சுமார் 47 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் வந்துள்ளார்.  அவர் திடீரென யாரும் எதிர்பாராத நிலையில் தான் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.   பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர் மீது தண்ணீர் ஊற்றிக் காப்பாற்றி உள்ளனர்.

தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் பெயர் நாகராணி என்பதும் 47 வயதான இவர் சென்னை மாதவரம் அருகே பெரிய மாத்தூர் பகுதியில் வசிப்பவர் என்பதும் தெரிய வந்துள்ளது.  இவருக்கு 17 வயதில் ஒரு மகன் உள்ளார்.  இவரை ராஜமங்கலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுவன் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு பிறகு ஜாமீனில் வெளி வந்துள்ளார்.   சிறுவன் சிறைக்குச் சென்று வந்ததால் மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து மீட்கப்பட்டுள்ளார்.  மகனின் தற்கொலை முயற்சியால் நாகராணி மனமுடைந்துள்ளார்.

அவர் தனது மகனைப் பொய் வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் இதற்காக காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி தமிழக தலைமைச் செயலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.