மும்பை:

கடந்த 7ம் தேதி டில்லியில் இருந்து புனே நோக்கி விஸ்தரா விமானம் 152 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இதேபோல் போபால் நோக்கி 109 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானமும் சென்று கொண்டிருந்தது.

மும்பை வான் பகுதியில் இந்த இரு விமானங்களும் மிக அருகில் பறந்துள்ளது. சுமார் 100 அடி தூர இடைவெளியில் பறந்ததை விமானங்களின் தானியங்கி எச்சரிக்கை கருவி சுட்டிக் காட்டியுள்ளது.

இதையடுத்து ஏர் இந்தியா பைலட் விமானத்தை பாதுகாப்பான இடத்தை நோக்கி இயக்கினார். இதனால் நடுவானில் நடக்க இருந்த பெரும் விபத்து சில விநாடிகளில் அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது. இதை தொடர்ந்து விஸ்தரா விமான பைலட்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் அதிர்ஷ்டவசமாக இரு விமானங்களில் இருந்த 261 பயணிகள், ஊழியர்கள் உயிர் தப்பினர். சாதுர்யமாக செயல்பட்ட ஏர் இந்தியா பெண் விமானி அனுபமா கோஹ்லிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அன்றைய தினம் 27 ஆயிரம் அடி உயரத்தில் அனுபமா ஏர் இந்தியா விமானத்தை இயக்கி கொண்டிருந்தார். 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விஸ்தரா விமானம் திடீரென 27 ஆயிரம் அடிக்கு குறைக்கப்பட்டது.

திடீரென அதே வழித்தடத்தில் மற்றொரு விமானம் வருவதை தானியங்கி எச்சரிக்கை கருவி சுட்டிக் காட்டியதை தொடர்ந்து அனுபமா தனது விமானத்தின் உயரத்தை உயர்த்தியதால் சில நொடிகளில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சுமார் 100 அடி தூரத்தில் அந்த விமானம் வந்ததாக அனுபமா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.