பிளாட்பார கொலையும் பேபி நகர் போலீஸும்
சென்னை வேளச்சேரி அண்ணாநகர் பிளாட்பாரத்தில் தங்கி வாழ்க்கை நடத்தி வரும் 42 வயது பெண் செல்வி. இவர் அப்பகுதியில் குப்பைகளைப் பொறுக்கி பிழைப்பு நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதே பிளாட்பாரத்தில் தங்கி வந்த பரணிதரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கணவன்- மனைவியாய் வாழ்ந்து வந்தனர்.
இரவில் இருவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். சம்பவத்தன்றும் அதேபோல இருவரும் மது அருந்தி விட்டுப் போதையில் பிளாட்பாரத்திலேயே சண்டை போட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பரணிதரன், அருகில் கிடந்த கட்டையை எடுத்து செல்வியைத் தாக்கியுள்ளார். அதில் தலையில் காயமடைந்த செல்வி, சம்பவ இடத்திலேயே மயங்கியுள்ளார். போதையிலிருந்த பரணிதரன் பயந்து போய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இரவு முழுவதும் கேட்பாரற்று ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார் செல்வி. காலையில் அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பேபி நகர் கோபால் தெருவைச் சேர்ந்த ஜோதிபாசு என்பவர் பார்த்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி செல்வி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். பேபி நகர் காவல்துறையினர் பரணிதரனை கைது செய்து அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.