சென்னை
அரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் எடைக்குறைப்பு சிகிச்சைக்குப் பின் ஒரு சிங்கப்பூர் பெண்மணி மரணம் அடைந்துள்ளார்
சிங்கப்பூரை சேர்ந்த ஒரு தொழிலதிபர் விஜயகுமார். இவரது மனைவி அலிஷியா தான் 85 கிலோ எடையுடன் இருப்பதால் எடையைக் குறைக்க விரும்பினார். அதற்காக சிகிச்சை பெற இருவரும் கடந்த நவம்பர் மாதம் சென்னை வந்தனர். அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நவம்பர் ஆறாம் தேதி அலிஷியா அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கொழுப்பை உறிஞ்சி எடுக்கும் லிப்போ சக்ஷன் முறை மூலம் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை புதன்கிழமை அன்று நடைபெற்றுள்ளது.
சிகிச்சைக்குப் பிறகு அவர் அறுவை சிகிச்சை கண்காணிப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் அவருக்கு பலவித உடல் உபாதைகள் உண்டானதாக கூறப்படுகிறது. விஜயகுமாரை அவர் மனைவியைப் பார்க்க அனுமதிக்கவில்லை என அவர் தெரிவிக்கிறார். 24 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள் அலிஷியா மரணம் அடைந்து விட்டதாக மருத்துவமனை விஜயகுமாருக்கு தெரிவித்துள்ளது. அவர் மருத்துவமனையின் கவனக்குறைவால் தன் மனைவி மரணம் அடைந்துள்ளதாக அமைந்தக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அத்துடன் தனது மனைவியின் சடலத்தை சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்ல அனுமதி கோரி உள்ளார். போலிஸ் தரப்பில் அலிஷியாவின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த பின்பே எடுத்துச் செல்ல முடியும் எனவும், பரிசோதனைக்குப் பிறகே மரணத்துக்கான காரணம் தெரிய வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எடைக்குறைப்புச் சிகிச்சைக்குப் பின் பெண் மரணம் அடைவது இது முதல்முறை அல்ல என செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு எடைக்குறைப்பு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு மரணம் அடைந்துள்ளார். மருத்துவர்களின் கவனக்குறைவே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. எடைக் குறைப்பு அறுவை சிகிச்சையால் மரணம் ஏற்படுகிறதா அல்லது மருத்துவர்களின் கவனக் குறைவால் மரணம் ஏற்படுகிறதா என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.