சிறப்பு ரயில் ஏறியவருக்கு நடுவழியில் பிரசவம்….

கேரளாவிலிருந்து சிறப்பு ரயிலில் தமது கணவர் முபாரக் அன்சாரியுடன் பீகார் சென்று கொண்டிருந்தார் 23 வயது கர்ப்பிணி ரேஷ்மா. இவர்கள் திருவனந்தபுரத்தில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். அரசு அறிவித்தபடி சொந்த ஊர் திரும்ப விண்ணப்பித்துச் சிறப்பு ரயிலில் பயணித்த 1200 பேர்களில் இந்த ஒன்பது மாத கர்ப்பிணியும் ஒருவர்.
ரயில் திருவள்ளூர் தாண்டும்போது ரேஷ்மாவிற்கு பிரசவ வலி அதிகமாகிவிட, கணவரும் சக பயணிகளும், இரயில் ஊழியர்கள் மற்றும் ரயில்வே போலீசாரிடம் விபரம் சொல்லி அடுத்த ஸ்டேஷனில் ரயிலை நிறுத்த கேட்டுக்கொண்டனர்.
அதன்படி அடுத்து வர இருந்த திருத்தணி ஸ்டேஷன் மாஸ்டருக்கு இவ்விசயத்தைத் தெரியப்படுத்தி அங்கே ஒரு ஆம்புலன்ஸ் தயாராக இருக்க ஏற்பாடு செய்தனர். ரயில் திருத்தணியை அடைந்ததும் ரேஷ்மா காத்திருந்த ஆம்புலன்ஸில் ஏற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கே தயாராக இருந்த மருத்துவர்கள் குழு அவருக்கு பிரசவம் பார்க்க, ரேஷ்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாய் சேய் இருவரும் நலமென்றாலும், சிசு எடை குறைவாக இருப்பதால் தற்போதைக்கு இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில் இவர்களை இறக்கிவிட்டுச் சென்று விட்டாலும், இவர்கள் சொந்த ஊர் செல்ல அடுத்து பீகார் செல்லும் ரயிலில் தகுந்த ஏற்பாடுகளைச் செய்வதாகத் திருத்தணி ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
கேரளாவில் இருந்த வரை அங்குள்ள தாலுகா மருத்துவமனையில் இப்பெண்ணிற்கு தேவையான அனைத்து பரிசோதனைகளையும் செய்வதற்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருந்திருக்கிறார் இவர்களது முதலாளி.
– லெட்சுமி பிரியா
[youtube-feed feed=1]