கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம், குக்கே சுப்பிரமணியாவில் குடும்பப் பிரச்சினை காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை முதலை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுப்பியைச் சேர்ந்த அந்தப் பெண், புதன்கிழமை இரவு குமாரதாரா ஆற்றுப் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்துள்ளார். அப்போது நீரில் இருந்த முதலை ஒன்று அவரைக் கடித்துள்ளது. உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்து ஆற்றில் குதித்த பெண், முதலை தாக்கியதால் உயிருக்கு பயந்து அலறியுள்ளார்.

AI generated

அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட அருகிலிருந்த தங்கும் விடுதி ஊழியர்களும், பொதுமக்களும் டார்ச் விளக்குகளுடன் ஆற்றங்கரைக்கு விரைந்து வந்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த சுப்பிரமணியா போலீசார், உள்ளூர் மக்களின் உதவியுடன் முதலையை விரட்டிவிட்டு, நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணைப் பத்திரமாக மீட்டனர். முதலை கடித்ததில் லேசான காயமடைந்த அவருக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினரை காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீசார், அவர்களுக்கு ஆலோசனை வழங்கி பெண்ணை குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். குடும்பத்தினரின் வேண்டுகோளின்படி வழக்குப் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிகிறது.

குக்கே சுப்பிரமணியா பகுதியில் உள்ள குமாரதாரா ஆற்றில் ஏராளமான முதலைகள் இருப்பதாகவும், அவை ஆற்றங்கரையிலும் பாறைகளிலும் ஓய்வெடுப்பதைப் பலமுறை பொதுமக்கள் பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.