சிங்கப்பூரில், 8 மாத ஆண் குழந்தையைத் தொடர்ந்து அடித்தும், குலுக்கியும, மூச்சுவிட முடியாமல் வாயையும் மூக்கையும் மூடியும் கொடுமைப்படுத்திய பெற்றோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தை உயிரிழந்த வழக்கில் தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறையும், தாய்க்கு 15 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறையும் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தையைத் துன்புறுத்தி ரசித்த பெற்றோர்!
சிங்கப்பூரைச் சேர்ந்த நியோ ஜியா மிங் (27), க்ளோய் கான் சி சுவான் (23) தம்பதிக்கு கடந்த 2023 டிசம்பர் 9-ஆம் தேதி ட்ரெவர் நியோ என்ற ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில வாரங்களிலேயே பெற்றோர் அதன் மீது கொடுமைகளைத் தொடங்கியுள்ளனர்.
குழந்தை அழும்போதெல்லாம் அதைத் தீவிரமாகக் குலுக்குவது, மூக்கையும் வாயையும் கைகளால் மூடி மூச்சுவிட முடியாமல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். தந்தை குழந்தையை அடித்ததுடன், அதன் வாய்க்குள் விரல்களை விட்டு காயப்படுத்தியுள்ளார். குழந்தையின் விரல்களைக் கிள்ளி அதன் எதிர்வினையைப் பார்த்து ரசித்ததாகவும் கூறப்படுகிறது.

இருவரும் குழந்தையைத் துன்புறுத்துவது குறித்து குறுஞ்செய்திகளில் பேசிக்கொண்டதுடன், இவ்வாறு குலுக்குவதால் மூளை பாதிக்கப்படலாம் என்பதையும் கேலியாகப் பேசியுள்ளனர்.
மயக்கமடைந்த குழந்தையை அப்படியே விட்ட தாய்!
குழந்தைக்கு சுமார் 41 நாட்களே ஆனபோது, தாய் அதைத் தீவிரமாகக் குலுக்கியதில் அது மயக்கமடைந்துள்ளது. குழந்தை சுயநினைவின்றிக் கிடந்தபோதும், தாய் மீண்டும் தூங்கச் சென்றுள்ளார். பின்னர் குழந்தை உணவு உட்கொள்ளும்போது எதிர்வினையாற்றாததால், இதுகுறித்து கணவரிடம் குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார்.
மற்றொரு சம்பவத்தில், தந்தை குழந்தையின் மூக்கையும் வாயையும் சுமார் ஒரு நிமிடம் மூடியதால், பால் வாந்தி எடுத்ததுடன் குழந்தையின் உடல் நிறமும் மாறியுள்ளது. குழந்தையைப் பராமரிக்கவே பயமாக இருப்பதாகக் கூறிய தந்தை, அதன்பிறகும் தொடர்ந்து குழந்தையைத் துன்புறுத்தியுள்ளார். நாளடைவில் தாயும் இதே கொடுமைகளைச் செய்யத் தொடங்கியுள்ளார்.
குழந்தையின் உடலில் காயங்களைக் கவனித்த அதன் பாட்டி, குழந்தையை அடிக்க வேண்டாம் என மகளை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. குழந்தையின் நாக்குக்குக் கீழே ரத்தக் காயம் ஏற்பட்ட சம்பவத்திலும் பெற்றோர் உண்மையை மறைத்துள்ளனர்.
மூச்சுத் திணறி உயிரிழந்த 8 மாதக் குழந்தை!
2024 செப்டம்பர் 1-ஆம் தேதி இரவு, குழந்தை அழுவதை நிறுத்துவதற்காக அதன் முகத்தில் போர்வையைப் போட்டு தாய் அழுத்தியுள்ளார். பின்னர் இரு கைகளாலும் குழந்தையின் மூக்கையும் வாயையும் இறுக்கமாக மூடியதுடன், முகத்தில் பலமாக அழுத்தியுள்ளார். தொடர்ந்து குழந்தையைக் குப்புறப் படுக்க வைத்துவிட்டு உறங்கச் சென்றுள்ளார்.
அன்றிரவு சுமார் 11.30 மணியளவில், குழந்தை மூச்சுவிடாமல் இருப்பதையும் அதன் கைகள் குளிர்ந்திருப்பதையும் கவனித்த தந்தை, மனைவியை எழுப்பியுள்ளார். இருவரும் குழந்தையை உயிர்ப்பிக்க முயன்றும் பலனில்லை.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில், காவல்துறையிடம் எதையும் கூற வேண்டாம் என மனைவியிடம் தந்தை தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸை அழைத்தால் செலவு ஏற்படும் எனக் கருதி, குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக நினைத்ததால் டாக்ஸியில் அழைத்துச் சென்றதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவு 12.20 மணியளவில், கே.கே. மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து தம்பதி கைது செய்யப்பட்டனர். பிரேதப் பரிசோதனையில் குழந்தையின் உயிரிழப்புக்கான துல்லியமான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.
பெற்றோருக்கு நீதிமன்றம் சிறைத் தண்டனை!
இந்த வழக்கில், குழந்தையைப் பராமரிக்க முடியாமல் மன அழுத்தத்தில் இருந்ததாகத் தம்பதி தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், அவர்களுக்குக் குடும்பத்தினரின் உதவியும் குழந்தையைப் பார்த்துக்கொள்ளப் பணியமர்த்தப்பட்ட ஆயாவும் இருந்ததை நீதிபதி சுட்டிக்காட்டினார்.
குழந்தையைத் துன்புறுத்தியதைப் பற்றித் தம்பதி கேலியாகப் பேசிய குறுஞ்செய்திகளையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் தந்தை நியோ ஜியா மிங்கிற்கு 16 ஆண்டுகள் சிறையும், தாய் க்ளோய் கான் சி சுவானுக்கு 15 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறையும் விதித்து உத்தரவிட்டது.