வடிவேலு ஒரு திரைப்படத்தில் ஊத்தாப்பம் தயாரிக்கும் முறையை சர்வரிடம் நீண்ட விளக்கமாகக் கூறிவிட்டு, கடைசியில் ‘அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்’ என்று ஆர்டர் கொடுக்கும் நகைச்சுவைக் காட்சி பலருக்கும் நினைவிருக்கும். அதேபோன்ற உணவுப் புரட்சி ஒன்று ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது!
பிரிஸ்பேனில் உள்ள La Costa உணவகத்தில் பணியாற்றிய இத்தாலிய சமையல் கலைஞர் டேவிட் தம்புரெல்லா, பீட்சாவில் அன்னாசி பழம் வைக்க மறுத்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பீட்சா என்பது இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் தோன்றி உலகம் முழுவதும் பிரபலமான உணவு. பாரம்பரிய இத்தாலிய பீட்சாவில் மாவு, தக்காளி சாஸ், மொசரெல்லா சீஸ், ஆலிவ் எண்ணெய், துளசி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் உண்டு.

ஆனால், ஹாம் மற்றும் அன்னாசி சேர்க்கப்படும் ஹவாயன் பீட்சா இத்தாலியில் உருவானது அல்ல. 1962-ல் கனடாவில் கிரேக்க வம்சாவளியைச் சேர்ந்த சாம் பனோபோலஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்தாலியர்களுக்கு பீட்சா என்பது வெறும் உணவு மட்டுமல்ல; அது அவர்களது பாரம்பரியம், கலாசாரம், அடையாளம். அதனால் பீட்சாவில் அன்னாசி சேர்ப்பதைத் தங்களது கலாசாரத்துக்கு அவமதிப்பாகச் சிலர் கருதுகின்றனர்.
அந்த வகையில், உணவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு ஹாம் – அன்னாசி பீட்சா தயாரிக்குமாறு நிர்வாகம் கேட்டபோது, தனது கலாசாரத்துக்கு எதிரான உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என தம்புரெல்லா மறுத்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அவர் இவ்வாறு மறுத்துள்ளார்.

இதுமட்டுமின்றி, அவரது பேச்சு முறை, தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியது, சக ஊழியர்களிடம் நடந்துகொண்ட விதம் உள்ளிட்ட புகார்களும் இருந்ததால் கடந்த மே மாதம் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, தன்னை அநியாயமாகப் பணிநீக்கம் செய்ததாகக் கூறி ஆஸ்திரேலியாவின் Fair Work Commission அமைப்பில் முறையிட்டார். ஆனால், காலதாமதமாக மனு தாக்கல் செய்ததால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலம்தான் அந்நாட்டின் அன்னாசி பழ உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அங்கு அன்னாசி பழத்துக்குப் பெயர்போன மாநிலத்திலேயே அன்னாசி பீட்சாவுக்கு எதிராகப் போராடியுள்ளார் இந்த இத்தாலிய செஃப்!
உணவக நிர்வாக இயக்குநரோ, ‘இது வெறும் பீட்சா டாப்பிங் பற்றிய பிரச்சினை மட்டுமல்ல; இந்தக் கதையில் இன்னும் பல விஷயங்கள் உள்ளன’ எனக் கூறியுள்ளார்.