கார் கடனை வசூலிக்கும் முகவரை கடிக்க கட்டிவைக்கப்பட்டிருந்த தனது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை விழ்த்துவிட்டதாக 29 வயது பெண்ணை கோவை நகர போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில், ஜெகதீஷ் (45) என்பவரை உடல்முழுவதும் பலஇடங்களில் அந்த நாய் கடித்துள்ளது.
வெள்ளலூர் மகாகணபதி நகரில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் மணிகண்டன் (32) என்பவர் 2020ம் ஆண்டு வாங்கிய காருக்கான கடனை திருப்பிச் செலுத்தத் தவறியதாகக் கூறப்படுகிறது.
கடந்த 20 மாதங்களாக தொலைபேசியிலும் தனிப்பட்ட முறையிலும் தொடர்ந்து நினைவூட்டியும் கடன் தொகையை மணிகண்டன் செலுத்தாத நிலையில் ஜெகதீஷ், சுரேஷ் மற்றும் கதிரவன் ஆகியோர் மணிகண்டன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
காருக்கான கடனை செலுத்த வேண்டும் என்று மணிகண்டனிடம் அவர்கள் கூறியதை அடுத்து மணிகண்டனும், அவரது மனைவி பிரியாவும் (29) தங்களிடம் பணம் இல்லை என கூறியுள்ளனர்.
இதையடுத்து ஊழியர்கள் காரை ஓட்டிச் செல்ல முயன்றபோது, காருக்குள் இருந்த தனது உடைமைகளில் சிலவற்றை எடுக்க அனுமதிக்குமாறு மணிகண்டன் கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து காரை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
உடனே, செல்ல நாயை பிரியா அவிழ்த்து மூவரையும் தாக்கும்படி கட்டளையிட்டார். நாய் உடனடியாக ஜெகதீஷ் மீது பாய்ந்தது.
இந்த சம்பவத்தில் மற்ற இரண்டு ஊழியர்களும் அங்கிருந்து தப்பியதை அடுத்து நாயிடம் இருந்து மீட்கப்பட்ட ஜெகதீஷ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட புகாரை ஏற்று விசாரணை நடத்திய காவல்துறையினர் நாயை ஏவி கடன் வசூலிக்கும் முகவரின் உயிருக்கு ஆபத்து விளைவித்த பிரியா-வை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பிரியா மீது ஏற்கனவே போர்ஜரி வழக்கு நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.