சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் மாற்றுத் திறனாளிகள் அளிக்கும் சாட்சியம் எந்த வகையிலும் தாழ்ந்தது இல்லை எனத் தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னையில் பார்வை குறையுள்ள மாற்றுத் திறனாளி பெண் ஒருவரை ஆட்டோ ஓட்டுநர் அன்புச்செல்வன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  அந்தப் பெண் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.  இந்த வழக்கில் சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றம் அன்புச்செல்வனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

தீர்ப்பை எதிர்த்து அன்புச்செல்வன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.  இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி, வேறொரு வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி, சராசரியான மனிதனின் சாட்சியத்தைவிட மாற்றுத்திறனாளிகளின் சாட்சியம் எந்த வகையிலும் தரம் தாழ்ந்ததாகக் கருத முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் அன்புச்செல்வனுக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையில் இருந்து  ஒருநாள் கூட குறைப்பதற்குத் தாம் விரும்பவில்லை எனக் கூறி, அந்த தண்டனையை  உறுதி செய்வதாகத் தீர்ப்பளித்தார்.