சென்னை:

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பயண அட்டை மோசடி மற்றும் ஓசிப் பயணம் காரணமாக அபராதத் தொகையாக 16,80,850  வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் கோ. கணேசன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்தில், உரிய பயணச்சீட்டு மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்பட்டுள்ள பயண அட்டை இல்லாமல் பயணம்  செய்வது, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதனால், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இதனை வலியுறுத்தி, பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட அவ்வப்போது பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மாநகர் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு பரிசோதகர்களைக் கொண்டு,  மேற்கொள்ளப் பட்டு வரும் பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்பரிசோதனையின் போது பயணச்சீட்டு இன்றி பயணிப்போரிடம் அபராதத் தொகை அதிகப்பட்சமாக ரூ.500/- வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தோர் கடந்த மே மாதத்தில் 3,915 நபர்களிடம் அபராதத் தொகையாக ரூ.6,00,850/-ம், ஜுன் மாதத்தில் 3,658 நபர்களிடம் அபராதத் தொகையாக ரூ.5,24,100/-ம் மற்றும் ஜூலை மாதத்தில் 3,218 நபர்களிடம் அபராதத் தொகையாக ரூ.5,55,900/-ம் ஆக மொத்தம் 10,791 நபர்களிடம் அபராதத் தொகையாக ரூ.16,80,850/- வசூலிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலும் இந்நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.