சென்னை: சங்கமித்ரா ரயிலில் வடமாநிலத்தை சேர்ந்த பலர் ‘வித்தவுட்’ பயணம் செய்து, ஏற்கனவே இருக்கை பதிவு செய்தவர்கள் இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில், பெரம்பூரில் இன்று ரயில்வே போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், டிக்கெட் எடுக்காமல் பயணித்துவந்த 653 பேர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து 3லட்சத்து 30ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டதாக ரயில்வே தெரிவித்து உள்ளது.
பெங்களூரு-பாட்னா சங்கமித்ரா ரயில் சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் வடமாநிலங்களைச் சேர்ந்த பலர், டிக்கெட் எடுக்காமல், ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களின் இருக்கைகளில் அமர்ந்து வருவது வாடிக்கையாகி வருகிறது. இதுதொடர்பான புகார்களில் மத்தியஅரசு அதிக கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்த நிலையில், இன்று சங்கமித்ரா ரயில் பெரம்பூர் ரயில் நிலையம் வந்தபோது, ரயில்வே அதிகாரிகள், காவல்துறையினர் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஏராளமானோர் டிக்கெட் எடுக்காமல் பயணித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை கொத்தாக அள்ளிய காவல்துறையினர், அவர்களில் 683 பேரிடம் அபராதம் வசூலித்தனர். அதன்படி, அபராத வசூல் மட்டும் 3லட்சத்து 38ஆயிரத்து 560 வசூலாகி உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் ரயிலில் இருந்து இறக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.