டில்லி:
தமிழகத்துக்கு தட்டுபாடின்றி மண்ணெண்ணெய் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக அமைச்சர் காமராஜிடம் உறுதி அளித்தார்.
‘ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு’ திட்டம் பற்றி விவாதிக்க டில்லி விக்யான் பவனில் உணவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார்.
அப்போது தமிழகத்துக்கு வழங்கி வரும் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுதிய கடிதத்தையும் மத்திய அமைச்சரிடம் வழங்கினார்.
அந்த கடிதத்தில்,தமிழகத்தில் 51.8 லட்சம் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு எல்பிஜி (கேஸ்) இணைப்பு இல்லை; 74.92 லட்சம் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒற்றை எல்பிஜி இணைப்பு மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, பொது விநியோகத்தின் கீழ் மாநிலத்திற்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை திருத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
இதை படித்து பார்த்த அவர் தமிழகத்துக்கு தட்டுபாடின்றி மண்ணெண்ணெய் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார். தனது டுவிட்டர் பக்கத்திலும், தட்டுப்பாடின்றி தமிழகத்துக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.