சேலம்: சாத்தனூர் அணையை முன்னறிவிப்பு இல்லாமல் திறந்தே வடமாவட்டங்களில் பெரும் பாதிப்பு என குற்றம் சாட்டி உள்ள முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளதார்.
சாத்தனூர் அணையில் இருந்து திடீரென 1.68 லட்சம் கன அடி நீரை தென் பெண்ணையாற்றில் முன் அறிவிப்பின்றி திறந்து விட்டதே வெள்ள பாதிப்புக்கு காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டி உள்ளார்.
சேலம் மாவட்டம், கந்தம்பட்டி பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
ஏற்காடு மலைப்பகுதிக்கு செல்லும் பாதையில் 20 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து தடைபட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 22 கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலம் உடைந்து மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
புளியங்கடை கிராமத்துக்கு செல்லும் தரைப்பாலம் உடைந்துள்ளது. கிட்டத்தட்ட 20 மலை கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடிகால் பணிகளை சரியாக செய்யவில்லை என்பதால் தான் திருமணிமுத்தாறில் தண்ணீர் தேங்கி, ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு பாதிப்பு உருவாகி உள்ளது. முறையாக இந்த ஆற்றை தூர் வாரி இருந்தால் உபரிநீர் வெளியேறி இந்த பிரச்னை ஏற்பட்டு இருக்காது. ஆனால் தி.மு.க., அரசு இதை தூர் வாரவில்லை. வேண்டும் என்றே திட்டமிட்டு ஒரு தவறான செய்தியை மக்களிடம் கூறி வருகின்றனர். உரிய முறையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தால் சேலம் மாநகரத்தில் மக்கள் பாதிப்புக்கு ஆளாகி இருக்க மாட்டார்கள்.
தமிழகத்தில் பெஞ்சல் புயலால் 4 நாட்களாக பரவலாக மழை பெய்கிறது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடுமையான மழை பெய்துள்ளது. சேலம், டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்த போதே முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்பை குறைத்து இருக்கலாம், மக்களை பாதுகாத்திருக்கலாம். ஆனால் இந்த அரசு சரியாக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நேற்றைய முன்தினம் இரவு, சாத்தனூர் அணையில் இருந்து திடீரென 1 லட்சத்து 68 ஆயிரம் கனஅடி நீரை தென் பெண்ணையாற்றில் முன்னறிவிப்பின்றி திறந்து விட்டுள்ளனர். எந்தவித முன் அறிவிப்பும் கிடையாது. ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டதால் கரையோர கிராம மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதோடு இல்லாமல் விழுப்புரம் நகரம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காட்சியளிக்கிறது. கடலூர் மாவட்டத்தில் 20 கிராமங்கள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தென் பெண்ணையாற்றின் கரையோர கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கின்ற திறமையற்ற முதல்வரின் நடவடிக்கையால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
அரசின் அலட்சியத்தால் தென்பெண்ணையாற்றின் கரையோர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். போர்க்கால அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் இடங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு முறையும் புயல் வரும்போதும் மத்திய அரசிடம் நிவாரணம் கோருவது வழக்கம். அந்த வகையில் இந்த அரசும், மத்திய அரசை தொடர்பு கொண்டு உரிய முறையில் நிவாரணத்தை பெறுவது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
சென்னை மக்கள் தூக்கத்தை தொலைத்த ஆட்சி என்று அ.தி.மு.க., ஆட்சியை பற்றி முதல்வர் ஸ்டாலின் குறை கூறினார். அதே கேள்வியை இப்போது முதல்வரை பார்த்து கேட்கிறோம். விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இந்த ஆட்சியில் தூக்கத்தை தொலைத்துள்ளனர். அவர்களின் தூக்கத்தை தொலைத்த அரசு, இந்த திமுக அரசு.
இவ்வாறு கூறினார்.