டில்லி

மூன்று மாதங்களில் 18 பொதுத்துறை வங்கிகள் சுமார் ரூ.32000 கோடி மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகளில் பண மோசடி அதிக அளவில் நடப்பதும் அதில் சம்மந்தப்பட்டவர்கள் நாட்டை விட்டு ஓடிவிடுவதும் தற்போது வழக்கமான ஒன்றாகி விட்டது.   இதைத் தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாகச் சொல்கிறது.    இந்த நடவடிக்கைக்குப் பிறகு பலர் வெளிநாட்டுக்கு ஓடுவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.    அதே நேரத்தில் மோசடிகள் நடப்பது குறையாமல் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோசடிகள் குறித்து நீமுச் நகரைச் சேர்ந்த ஆர்வலர் சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி உள்ளார்.   அதற்கு ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “நாட்டில் உள்ள 18 பொதுத்துறை வங்கிகளில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை 2480 மோசடிக் குற்றக்கள் நடந்துள்ளன.  இதில் ரூ.31,898.63 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கடன் வழங்குவதில் முதல் இடத்தில் உள்ள ஸ்டேட் வங்கியில் அதிக அளவு மோசடிக் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.   இந்த வங்கியில் ரூ.12,012.77 கோடி மதிப்பிலான 1197 குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  அதற்கு அடுத்தபடியாக அலகாபாத் வங்கியில் ரூ.2855.46 கோடி மதிப்பிலான 381 குற்றங்களும், மூன்றாவதாக ரூ.2526.55 கோடி மதிப்பிலான 99 குற்றங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ரூ.2297.05 கோடி மதிப்பிலான 75 குற்றங்களுடன் பரோடா வங்கி,  ரூ.2133.08 கோடி மதிப்பிலான 45 குற்றங்களுடன் ஓரியண்டல் காமர்ஸ் வங்கி,  ரூ.2035.81 கோடி  மதிப்பிலான 69 குற்றங்களுடன் கனரா வங்கி, ரூ.1982.87 மதிப்பிலான 194 குற்றங்களுடன் செண்டிரல் பாங்க் ஆஃப் இந்தியா, மற்றும் ரூ.1196.19 கோடி மதிப்பிலான 31 குற்றங்களுடன் யுனிடடெட் இந்தியா வங்கி ஆகியவை உள்ளன.

இதைத் தவிர கார்பொரேஷன் வங்கி,  இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, யுகோ பாங்க் உள்ளிட்ட வங்கிகளில் ரூ. 470.74 கோடி முதல் ரூ.960.80 கோடி வரை மதிப்பிலான குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  அதைப் போல் மிகச் சிறிய அளவில் மகாராஷ்டிரா வங்கி, ஆந்திரா வங்கி, இந்தியன் வங்கி மற்றும் பஞ்சாப் சிந்த் வங்கி ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.