டில்லி

டில்லியில்  பிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் வழிப்பறி செய்த நபர் 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

அமிர்தசரஸ் நகரில் இருந்து பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடியின் மகள் தமயந்தி பென் மோடி டில்லிக்கு வந்துள்ளார்.    இவர் வடக்கு டில்லியில் உள்ள குஜராத்தி சமாஜ் பவனில் அறை ஒன்றைப் பதிவு செய்திருந்தார்.   அவர் பழைய டில்லி ரெயில் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் அங்குச் சென்றுள்ளார்.  அவர் ஆட்டோவில் இருந்து இறங்கும் போது  இரு நபர்கள் மோட்டார் பைக்கில் வந்து அவருடைய கைப்பையைப் பறித்துச் சென்றுள்ளனர்.

தமயந்தி பென் வைத்திருந்த கைப்பையில் ரூ.56000 ரொக்கம், இரு செல்போன்கள், வங்கி டெபிட் கார்ட் உள்ளிட்டவை இருந்துள்ளன.    உடனடியாக தமயந்தி பென் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.    வழிப்பறி நடந்த பகுதியில் டில்லி ஆளுநர்,  முதல்வர் உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர்.    இவ்விடத்தில் பிரதமரின் உறவினரிடம் வழிப்பறி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

காவல்துறையினர் 20 குழுக்கள் அமைத்து குற்றவாளிகளைப் பிடிக்கக் களம் இறங்கினர்.  அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களின் பதிவை ஆய்வு செய்ததில் ஆட்டோவை சுமார் 15 நிமிடங்களாக அந்த இருவரும் பின் தொடர்ந்தது தெரிய வந்துள்ளது.  இன்று அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பெயர் நோனு எனவும் அவரிடம் இருந்து இரு செல்போன்கள் மற்றும் ரூ.50000 ரொக்கம் கிடைத்துள்ளது.    மற்றொரு நபரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.    காவல்துறையினரிடம் பல  புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில் இவ்வாறு 24 மணி நேரத்துக்குள் குற்றவாளியைக் கைது செய்து பொருட்களை மீட்பது அரிய நிகழ்வு என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.