2 குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை!! மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

சென்னை:

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 6 மாத குழந்தை உட்பட இரு குழந்தைகளுக்கு சென்னை மியாட் மருத்துவமனை டாக்டர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மறு வாழ்வு அளித்துள்ளனர்.

கிழக்கு ஆப்ரிக்கா தான்சானியா நாட்டின் ஜன்சிபார் நகரைச் சேர்ந்த 6 மாத குழந்தை, அமீத் ஹாபித். அதே கிழக்கு ஆப்ரிக்காவின் செஷெல்ஸ் தீவில், பைலரி ஆட்ரீஸியா என்ற பிறப்பு குறைபாடுடன் பிறந்த 2 வயது குழந்தை கிரேஸ் கியாரா செரில் ஆகிய இரு குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குழந்தைகளை பரிசோதித்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேந்திரன் தலைமையிலான குழுவினர் வெற்றி கரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இது குறித்து மியாட் மருத்துவமனை தலைவர், மல்லிகா மோகன்தாஸ் மற்றும் டாக்டர் சுரேந்திரன் ஆகியோர் கூறுகையில், ‘‘குழந்தை அமீத் ஹாபித்திற்கு பிறந்த 15 நாட்களில் மஞ்சள் காமாலை, ரத்தப்போக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லை. இதையடுத்து மியாட் மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையே தீர்வு என்று முடிவு செய்யப்பட்டது. குழந்தையின் தாய், கல்லீரல் தானம் செய்தார்.

6 முதல் 10 மாத குழந்தைகளுக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சாதாரணமான காரியம் அல்ல. புதிய கல்லீரலில் இணைக்கப்பட வேண்டிய ரத்த நாளம் மிகச் சிறியதாக இருக்கும். தாயிடம் இருந்து 350 கிராம் எடையில், 20 சதவீத கல்லீரல் எடுக்கப்பட்டது. அதை 6 கிலோ எடை உடைய அமீத்திற்கு ஏற்ற வகையில் 250 கிராமாகக் குறைத்து வெற்றிகரமாக பொருத்தினோம்’’ என்றார்.

‘‘குழந்தை கிரேஸ், பைலரி ஆட்ரீஸியா என்ற பிறப்பு குறைபாடுடன் பிறந்தது. அதற்கு இலங்கையில் சிகிச்சை நடந்துள்ளது. ஆனால், 2 வயதான போது பாதிப்பு அதிகமானது. இங்கு அனுமதித்த போது கல்லீரல் முற்றிலும் சேதமாகி இருந்ததை கண்டு பிடித்தோம். அந்த குழந்தைக்கும், தாயின் கல்லீரலை தானமாக பெற்று பொருத்தினோம். தற்போது, 2 குழந்தைகளும் மறு வாழ்வு பெற்று, நலமுடன் உள்ளனர்’’ என்றார்.


English Summary
With slices of liver from their moms, two children get another shot at life