சென்னை:

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஆகாஷ். 30 வயதாகும் இவர் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர். உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது நோய் தாக்குதலுக்கு ஆளான ஆகாஷூக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. 75 சதவீத மாற்றுத் திறனாளி என்று இவர் சான்றிதழ் வைத்துள்ளார்.

வேதியியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்ற இவர் சென்னை ஐஐடி.யில் பி.ஹெச்டி பிரிவில் கடந்த 2010ம் ஆண்டு சேர்ந்தார். முதல் முறையாக இந்த கல்விக்காக பார்வை குறைபாடுடன் இவர் வீட்டில் இருந்து வெளியேறினார். கடும் போராட்டத்திற்கு பின் 5 ஆண்டுகள் படித்து தனது கல்வியை நிறைவு செய்தார்.

இவரது ஆய்வு கட்டுரை சர்வதேச வேதியியல் இன்ஜினியரிங் துறை இதழில் வெளியானது. உதவி ஆராய் ச்சியாளராக வேண்டும் அல்லது பேராசிரியராக வேண்டும் என்று இவர் முயற்சி செய்து வருகிறார். ஐஐடி ரூர்கி, கான்பூர், எம்என்ஐடி, என்ஐடி கான்பூர், ஐஐஎஸ்இஆர் போபால், ஐஐஎஸ்இஆர் கொல்கத்தா மற்றும் ஓஎன்ஜிசி ஆகியவற்றுக்கு பணிக்காக விண்ணப்பித்தார்.

இவரது பார்வை குறைபாடு காரணமாக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இவர் முயற்சி செய்து வருகிறார். ஆனால் பலன் ஏதும் கிடைக்கவில்லை.
‘‘அரசு நிறுவனங்களில் 3 சதவீதம் மாற்று திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று உ ச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த நிறுவனங்கள் எந்தெந்த பணியிடம் மாற்றுத்திறனாளிகளு க்கு உரியது என்று தீர்மானம் செய்யாமலேயே இருக்கின்றனர்’’ என்று ஆகாஷ் கூறி வருத்தப்பட்டார்.

‘‘பணியிடம் காலியாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் என்னை அந்த பணியிடத்தில் நியமிக்க மறு க்கின்றனர். இதற்கு காரணம் எனது பார்வை குறைபாடு தான்’’ என்றார்.

மாற்றுத்திறனாளி உரிமை குழு தலைவர் தீபக் கூறுகையில்,‘‘‘ மத்திய அரசு இதில் தலையிட்டு திறமைமி க்க ஆகாஷூக்கு பணி வழங்க வேண்டும். வேதியியலில் பி.ஹெச்டி முடிப்பது என்பது எளிதான காரியமல்ல. இதன் மூலம் அவரிடம் தொழில்நுட்ப அறிவு எவ்வளவு இருக்கிறது என்பதற்கு இது உதாரணம். இதற்கு என்று பிரத்யேக குழுவை மத்திய அரசு அமைத்து அவரது திறமை, அறிவை கண்டறிந்து பொருத்தமான பணியை வழங்க வேண்டும். பார்வை குறைபாடு ஒருவரை ஆராய்ச்சியாளர் அல்லது பேராசிரியர் ஆவதை தடுத்துவிடக் கூடாது’’ என்றார்.

தற்போது இவர் ஒரு கல்வி நிறுவனத்தில் ஆய்வக தொழில்நுடப் கண்காணிப்பாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளார். இந்த பணியிடத்திற்கு இவரது கல்வி தகுதி அதிகம் தான். ஆனால் என்ன செய்வது வேறு வழியில்லை என்கிறார் ஆகாஷ். ‘‘எனது தந்தை உடல்நிலை பாதித்துள்ளார். ஒவ்வொன்றுக்கும் எனது தாயாரிடம் உதவி கேட்க முடியவில்லை. அதனால் வருமானத்திற்கு வழிதேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்’’ என்றார்.