சென்னை:

மிழகத்திலேயே கொரோனா பரவல் சென்னையில் அதிகரித்து வருகிறது. இதுவரை 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, கொரோனா பரவுவதை தடுக்க67 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துஉள்ளது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்று பரவல் 621 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையும் 6 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிக் – இ – ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மூலம் தொற்று, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக சென்னை மாநகராட்சி மூலம், வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சுகாதாரத்துறை பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் மட்டுமின்றி, வேலையில்லா பட்டதாரிகளும் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை மாநகரம் 13,100 துறைகளாகப் பிரிக்கப்பட்டு 16,000 சுகாதாரப் பணியாளர்கள் இந்த நோக்கத்திற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இவர்கள் மூலம் வீடுகள் தோறும்  கணக்கெடுக்கும் பணி  ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அப்போது, வீட்டில் குடியிருப்போர் மற்றும், அவர்களின் வயதானவர்கள் எத்தனை பேர், அவர்களுக்கு என்னென்ன நோய்கள் உள்ளது என்பது குறித்து தகவல் சேமித்து வருகின்றனர்.

மேலும், சுவாச நோய்த்தொற்று அறிகுறி யாருக்கேனும் உள்ளதாக, கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், நீண்டகால மருத்துவ வியாதிகள் உள்ள நோயாளிகளின் விவரங்களும் சேமிக்கப்படுகிறது.

சென்னை மாநகரத்தில் இருந்து  மற்ற பகுதிகளுக்கு கொரோனா பரவல் நடைபெறாத வகையில், நகரம் முழுவதும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்காக 67 “கிளஸ்டர் கட்டுப்பாட்டு மண்டலங்கள்” உருவாக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.

தற்போது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள  ராயபுரம் பகுதியில்  22 கிளஸ்டர் தடுப்பு  கட்டுப்பாட்டு மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும், திரு வி கா நகரில்  11 கிளஸ்டர் கட்டுப்பாட்டு மண்டலங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மண்டலம் 4, தண்டையார்பேட்டையில்  9 தடுப்புக் கிளஸ்டர் கட்டுப்பாட்டு மண்டலங்கள் மற்றும் மண்டலம் 9, தேனாம்பேட்டையில் கிளஸ்டர் கட்டுப்பாட்டு மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேவேளையில்,  மணலி, அம்பத்தூர், அண்ணா நகர் மற்றும் ஆலந்தூரில் கிளஸ்டர் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அமைக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தற்போதைய நிலையில், வடசென்னையின் முக்கிய பகுதியும், சிஏஏக்கு எதிராக பல நாட்கள் போராட்டம் நடைபெற்ற ராயபுரத்தில் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து , திரு வி கா நகர் பகுதியில் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் மாநகராட்சி வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து கூறிய சென்னை மாநகராட்சி துணை ஆணையர், கொரோனா பரவலை தடுக்கவே, மண்டலங்கள் வாரியாக கிளஸ்டர் கட்டுப்பாட்டு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், அதன்படி. கொரோனா பாதிக்கப்பட்டு உள்ளவர் வசித்து வந்த பகுதிகளில்  “தற்காலிக தடுப்புகள் தெருக்களில் வைக்கப்பட்டு, அநத பகுதிக்குள்ள மற்றவர்கள் செல்லவும், வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

இந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும்,  வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் சுகாதார பணியாளர்கள், எந்த வீட்டிலாவது, சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் தென்படுவது குறித்து  புகாரளிக்கப்பட்டால், அவற்றை சரிபார்க்க ஒரு மருத்துவ குழு அந்த இடத்திற்கு விரைந்து சென்று  ஆய்வு மேற்கொள்ளும், தேவைப்படின் அவர்கள்  மருத்துவமனை தனிமைக்கு மாற்றப்படலாம் என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும், அனைத்து மண்டலங்களிலும், 108 ஆம்புலன்ஸ்கள் தயாராக  நிறுத்தப்பட்டுள்ளன. சாத்தியமான COVID-19 நோயாளிகள் அல்லது சந்தேகத்திற்கிடமான வழக்குகளை கொண்டு செல்வதற்கு அவை பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுகின்றன.

இது மட்டுமின்றி,  கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள அனைத்து வீடுகளும், பொது இடங்களும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன என்று தெரிவித்து உள்ளார்.

சென்னையில் 15 மண்டலங்கள் உள்ள நிலையில், இதுவரை 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், மண்டலம் 5 ராயபுரம் பகுதியில் 27பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர்களில் 2 22 பேர் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.