புனே

பிரபல ஐடி நிறுவனமான விப்ரோ மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா சிகிச்சைக்காக 450 படுக்கைகள் கொண்ட ஒரு தற்காலிக மருத்துவமனை அமைக்கிறது.

பிரபல நிறுவனமான விப்ரோ குழுமம் மக்கள் பணிக்காகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   அந்நிறுவனத்தின் நிறுவனரும் முன்னாள் தலைவருமான அசிம் பிரேம்ஜி தனது சொத்துக்களில் பெரும்பங்கை சமூகப் பணிகளுக்காகச் செலவழிக்க அசிம் பிரேம்ஜி ஃபவுண்டேஷன் என்னும் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி  வருகிறார்.  விப்ரோ நிறுவனம் மற்றும் இந்த தொண்டு நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.

அவ்வகையில் மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் விப்ரோ நிறுவனம் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோருக்குச் சிகிச்சை அளிக்க 450 படுக்கைகள் கொண்ட ஒரு தற்காலிக மருத்துவமனையை அமைக்க மகாராஷ்டிர அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.  அதன்படி இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் இந்த மருத்துவமனை அமைக்கப்பட்டு மகாராஷ்டிர அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இந்த மருத்துவமனையில் படுக்கைகள் மேஜைகள், நாற்காலிகள் போன்றவற்றை விப்ரோ அளிக்க உள்ளது.  மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் அனைத்து பணியாளர்களையும் மகாராஷ்டிர அரசு நியமிக்க உள்ளது.  இந்த ம்ருத்துவ்ம்னையில் அதிகம் பாதிப்பு இல்லாத நோயாளிகள் அனுமதிக்கப்பட உள்ளனர்.  அவசர சிகிச்சைக்காக 12 படுக்கைகளுடன் ஒரு சிறப்பு மையம் அமைக்கப்பட உள்ளது

விப்ரோ நிறுவனத் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, “அரசுடன் இணைந்து கொரோனாவை அகற்றும் பணியில் விப்ரோ நிறுவனம் முழுமையாக பணியாற்ற உள்ளது.  இந்த கொரோனா பேரபாயத்தை நம் அனைவரும்  ஒன்றிணைந்து செயல்பட்டால் மிக எளிதாக விரட்டி விடலாம்.  அத்துடன் நமது பணிகளின் மூலம் மனித இனத்துக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, “விப்ரோ நிறுவனத்தின் இத்தகைய மனிதாபிமான பங்களிப்பு மருத்துவ உட்கட்டமைப்பைப் பலப்படுத்தும்.  அத்துடன் இந்த நடவடிக்கை கொரோனாவுக்கு எதிராக முன் நின்று போரிடும் மருத்துவர்களுக்கும் மற்ற ஊழியர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.” எனக் கூறி உள்ளார்.