டெல்லி: 12எம்.பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம் காரணமாக, மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். மாநிலங்களவையில் ஏற்பட்ட அமளி காரணமாக பகல் 12மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் (நவம்பர் 29ந்தேதி) இன்று தொடங்கி டிசம்பர் 23ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையில் மழைக்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பிக்கள், குளிர்கால கூட்டத்தொடரிலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதை ரத்து செய்யக் கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று 3வது நாளாக சபை கூடியதும், மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மக்களவையில் விவசாயச் சட்டப் போராட்டத்தின் போது விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தை எழுப்பினார். அதுகுறித்து சபாநாயகர் விவாதிக்க மறுத்ததால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எங்களுக்கு நீதி வேண்டும் என கோஷங்களை எழுப்பினர் இதனால் மக்களவை பரபரப்பாக காணப்படுகிறது.
அதுபோல மேலும் சபையிலும் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்டு உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி எம்.பிக்கள் கோஷம் எழுப்பினர். எங்களுக்கு நீதி வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனால், அவை 12மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.