சென்னை: சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வதுதான் முக்கியமே தவிர, முதல் போட்டியில் வெல்வதும் தோற்பதும், பெரிய விஷயமில்லை என்றுள்ளார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா.
இதை, கோலியின் கருத்துக்கு பதிலடியாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் வென்றது குறித்து, பெங்களூரு கேப்டன் கோலி கூறியதாவது, “கடந்த ஆண்டும் முதல் போட்டியில் வெற்றி பெற்று, வெற்றியுடன் தொடங்கினோம், இந்த ஆண்டும் வெற்றியுடன் தொடங்கியிருக்கிறோம்” என்றார்.
இந்நிலையில், கோலியின் கருத்துக்கு பதிலளித்துள்ள ரோகித், “ஐபிஎல் தொடரில் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதுதான் முக்கியம். முதல் போட்டியில் வெல்வதும், தோல்வி அடைவதும் முக்கியமல்ல என நினைக்கிறேன். இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் இடையே நல்லவிதமாக அமைந்தது. யாரும் எளிதாக வெற்றியை விட்டுக்கொடுக்கவில்லை. நாங்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில், எதிர்பார்த்த அளவுக்கு நல்ல ரன்களை எடுக்கவில்லை. 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.
சில தவறுகளை பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் செய்திருக்கிறோம். அதைக் கடந்து அடுத்தப் போட்டிக்குச் செல்ல வேண்டும். கடைசி 4 ஓவர்களில் டிவில்லியர்ஸ், கிறிஸ்டியன் களத்தில் இருந்தபோது, ஆட்டம் எங்கள் பக்கம்தான் இருந்தது.
இருவரையும் ஆட்டமிழக்கச் செய்யத்தான் பும்ராவையும், போல்ட்டையும் பயன்படுத்தினேன். ஆனால், உண்மையில் சேப்பாக்கம் ஆடுகளமானது, பேட்டிங் செய்வதற்கு எளிதானது அல்ல. பந்து மெதுவாக பேட்ஸ்மேனை நோக்கி வருகிறது.
டிவில்லியர்ஸ் சிறப்பாக பேட் செய்தார். எங்களால் துபாயில் இருந்ததைப் போன்று குழுவாக இருக்க முடியவில்லை, துபாயில் ஒருமாதம் முன்பே நாங்கள் தொடருக்கு தயாராகினோம். இங்கு எல்லாமே நேர் எதிராக இருக்கிறது” என்றுள்ளார் அவர்.