பாட்னா:
பீகாரில் நடந்த ராமநவமி விழா கொண்டாட்டத்தை தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள், கலவரங்கள் அதிகரித்து வருகிறது. மேலும், பல மாவட்டங்களுக்கு கலவரம் பரவி வருகிறது. இரு சமூக மக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலால் மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
இந்த கலவரத்துக்கு எதிராக பீகார் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று முதல்வர் நிதிஷ்குமார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரை கையாளாகதவர் என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. பாஜக.வின் திட்டத்தை முதல்வர் செயல்படுத்துவதாக எதிர்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய ஜனதா தள பொதுச் செயலாளர் ஷியாம் ராஜாக் முதல்வர் நிதிஷ்குமார் சார்பில் பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் என்டிடிவி.க்கு அளித்த பேட்டியில், ‘‘சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதை முதல்வர் நிதிஷ்குமார் ஏற்றுக் கொள்ளமாட்டார். இதற்காக எத்தகையை விலையை கொடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்’’என்று தெரிவித்துள்ளார்.
இந்த கலவரம் நிதிஷ்குமாரின் சொந்த ஊரான நலந்தா மாவட்டத்தில் தொடங்கி இதர மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. கடந்த ஒரு வாரமாக அங்கு நிலையை மோசமாக உள்ளது.