விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நீயாநானா” நிகழ்ச்சி, குறித்து அவ்வப்போது சர்ச்சை எழுவது உண்டு. பங்கேற்பாளர்களை மதிக்காத போக்கு, செட்அப் செய்து பேசவைப்பது, சமுதாய சூழலை அலசுவதாகச் சொல்லிவிட்டு வீண்சர்ச்சைகளை கிளப்புவது.. இப்படி.
இந்த நிலையில், “பொய்யான தகவல்களைக் கூறி நிகழ்ச்சிக்கு அழைத்துவிட்டு மனநோயாளி என முத்திரை குத்திவிட்டார்கள்” என்ற சர்ச்சை புதிதாக எழுந்திருக்கிறது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட செல்லப்பாண்டியன் பேசியதை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.
அதே போல இந்த நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட இன்னொருவர் “ஜெபமணிஜனதா” கட்சியின் பொது செயலாளர் மோகன்ராஜ்.
இவரை தொடர்பு கொண்டு பேசினோம். அவர், “ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த டீமில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவன் நான். விசாரணையின் போக்கு சரியில்லை என்பதால் 45 வயதில் அந்த பணியைத் துறந்தேன். “ஜெபமணிஜனதா” என்ற கட்சியைத் துவங்கி ராஜீவ் கொலை மர்மங்கள் வெளிவரவும், பொதுநலத்துக்காகவும் போராடிக்கொண்டிருக்கிறேன். ஊழலை எதிர்த்தும், தொடர்ந்து போராட்டங்கள் நடத்திவருகிறேன். மணல் கொள்ளையை எதிர்த்தும் பல போராட்டங்களை நடத்தினேன். தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பாத யாத்திரை பிரச்சாரம் செய்தேன். தேர்தல்களிலும் போட்டியிட்டிருக்கிறேன்.
இந்த நிலையில் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சிக்காக தொடர்புகொண்டவர்கள், “சிறுகட்சி நடத்துபவர்களை அழைத்து ஒரு விவாதம் நடத்துகிறோம். உங்கள் அமைப்பைப் பற்றி பேசலாம். வாருங்கள்” என்று அழைத்தார்கள்.
ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கான படப்படிப்பில் கலந்துகொள்ளசென்றேன். அவசர அவசரமாக ஒரு ஆங்கில படிவத்தைக் கொடுத்து கையெழுத்து வாங்கினார்கள். ஏதோ நடைமுறை என்று கையெழுத்திட்டேன்.
நிகழ்ச்சியின் படப்பிடிப்பு துவங்கியதும்தான் தெரிந்தது… அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி, “சிறு அமைப்புகளை நடத்துபவர்கள்” பற்றியது அல்ல. “விநோதமானவர்களும் விசித்திரமானவர்களும் “என்ற தலைப்பிலான நிகழ்ச்சி.
தான் நினைத்தால் மழைபெய்யும் என்பவர், ரயிலில் இருக்கை கன்பார்ம் ஆகவேண்டுமென்றால் தான் கொடுக்கும் மாத்திரையை சாப்பிடுங்கள் என்பவர், தான் பாடிய பல்லவிகளை 1993 ல் இருந்து ஏ ஆர் ரஹ்மான் திருடி 20000 கோடிகளுக்கு மேல் சம்பாதித்து விட்டதாக கூறும் ஒருவர், தான் மாயன் காலத்து எந்திரங்களை வைத்து சிகிச்சை அளிப்பதாக கூறும் ஒருவர்… இப்படிப்பட்டவர்களாக வந்திருந்தார்கள். ஒரு ஆட்டோ ஓட்டுனர் தான் மாதம் ஒரு லட்சம் சம்பாதிப்பதாகவும், ஐ ஐ டி மற்றும் பிட் பிலானிகளில் படிப்பவர்களை ஆட்டோ ஒட்டி லட்சம் சம்பாதிக்க வைப்பதே தன் லட்சியம் என்றார்.
கோபிநாத் குறுக்கே பேச பார்வையாளர்களில் ஒருவர் மற்றவர்களை பார்த்தால் WEIRD ஆக தெரிவதாகவும் ஆனால் ஆட்டோ டிரைவர் ஒரு லட்சியவாதி எனவும் அவரை தான் நன்கு அறிவேன் என்றும் கூறினார். நான் உடனே என் ஆட்சேபத்தை தெரிவிக்க முயன்றேன்.
ஆனால் கோபிநாத் விடவில்லை. அதோடு, சைகாலாஜி படித்தவர்கள் என்று சொல்லிக்கொண்ட ஒருவர் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்களில் பாதி பேர் மக்கள் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்க என்ன வேண்டுமானாலும் செய்யும் மனநிலை பாதிப்பு கொண்டவர்கள் மற்றவர்கள் தங்களையும் ஏமாற்றி மற்றவர்களையும் ஏமாற்றும் ஆபத்தான மன நிலை கொண்டவர்கள் என்றும் சொன்னார்.
மற்றெரு நபர்.. மழை சித்தர் என்பவரையும் ஏ.ஆர். ரஹ்மான் விவகாரம் சொன்னவரையும் மனநோயாளிகள் என்று அடித்து சொல்லி தன்னிடம் வந்து வைத்தியம் பார்த்தால் ஒரு மாதத்தில் குணமாக்கி விடுவதாகவும் கூறினார்.
வெறும் சைகாலாஜி படித்தவர்கள் எப்படி ஒருவரை கொஞ்ச நேரத்தில் மனநோயாளிகள் என்று கண்டு பிடித்தார்கள் என்று புரியவில்லை.
“நீயாநானா” நிகழ்ச்சி தயாரிப்பாளர்களின் சூழ்ச்சி புரிந்தது. அதாவது ஏமாற்றி என்னை அழைத்து வந்து நிகழ்ச்சியில் பங்குபெற வைத்திருக்கிறார்கள். இதேபோல பாதிக்கப்பட்ட இன்னொருவர் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்லபாண்டி. நிகழ்ச்சியின் போக்கை உணர்ந்த நான் உடனே நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் மற்றும் அந்நிகழ்ச்சியின் பொறுப்பார்கள்களிடம் எனது ஆட்சேபத்தைக் கடுமையாக தெரிவித்தேன்.
இதையடுத்து அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது, எனது பகுதியை கட் செய்துவிட்டார்கள். அதேநேரம் தவிர்க்க முடியாத இடங்களில் எனது முகத்தை மாஸ்க் செய்து ஒளிபரப்பினார்கள். ஆனாலும் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை பொய் சொல்லி அழைத்து மனநோயாளி என முத்திரைகுத்துவது மன்னிக்க முடியாத குற்றம்.
ஆகவே இதுகுறித்து கேகேநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அங்கு, “நிகழ்ச்சியில் பங்குபெறும் முன்பு நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டிருக்கிறீர்கள். ஆகவே நாங்கள் ஏதும் செய்யமுடியாது” என்று கூறிவிட்டனர்.
அடுத்து விஜய் டிவிக்கும் நீயா நானா தயாரிப்பாளுக்கும், “ஒரு வாரத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று நோட்டீஸ் விட்டிருக்கிறேன்.
அவர்கள் மன்னிப்பு கேட்காவிட்டால், விஜய் டிவி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறேன்.
எனக்கும் மனநோயாளி என்று பட்டம் சுமத்தப் பார்த்தார்கள் அல்லவா… மனநோயாளி என்ன செய்வான் என்பதை அந்த ஆர்ப்பாட்டத்தின்போது காண்பிக்கிறேன்” என்றார்ஆவேசமாக.
இதுகுறித்து நீயா நானா தரப்பினரின் கருத்தைக் கேட்க அந் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத்தை தொடர்புகொண்டுபேசினோம். அவர், “நான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்தான். நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆண்டனியிடம் பேசுங்கள்” என்றார்.
ஆண்டனியை தொடர்பு கொள்ள அவரது எண்ணில் தொடர்ந்து தொடர்பு கொண்டோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.
அவர் தனது கருத்தைத் தெரிவிக்க விரும்பினால் பிரசுரிக்கதயாராக இருக்கிறோம்.
– டி.வி.எஸ். சோமு
பாதிக்கப்பட்ட இன்னொருவரான செல்லபாண்டியனின் பேட்டி:
தற்கொலைக்குத் தூண்டும் “நீயா நானா”: விஜய் டிவிக்கு ஒரு வேண்டுகோள் ( ஆடியோ)