அங்கீகாரமற்ற நர்ஸரி & மழலையர் பள்ளிகள் – வரும் கல்வியாண்டில் மூடுவிழா..?

Must read

சென்னை: தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத நர்ஸரி மற்றும் மழலையர் பள்ளிகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ள நிலையில், வரும் கல்வியாண்டில் அவற்றை மூடுவதற்கு, மாநில தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; தமிழக பள்ளிக் கல்வித்துறையில், பள்ளிக் கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர், மெட்ரிக்குலேஷன் இயக்குனர் போன்ற அதிகாரிகளின் கீழ், பள்ளிகள் செயல்படுகின்றன. விதிமுறையின்படி, தனியார் மெட்ரிக் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் இயக்குனரகத்தின் அங்கீகாரம் பெற வேண்டும்.

அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் போன்றவை, பள்ளிக் கல்வி இயக்குனரின் அங்கீகாரம் பெற வேண்டும். தொடக்க, நடுநிலை, நர்சரி மற்றும் இளம் மழலையர் பள்ளிகள், தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் அங்கீகாரம் பெறுவது கட்டாயம்.

இந்நிலையில், நர்சரி மற்றும் இளம் மழலையர் பள்ளிகள், மூலைக்கு மூலை பெட்டிக் கடைகள் போல செயல்படுகின்றன. அவற்றில் பல பள்ளிகள், அரசுத் துறையில் எந்த அனுமதியும், அங்கீகாரமும் இல்லாமல் செயல்படுகின்றன.

பல பள்ளிகள் சிறிய கட்டடங்களிலும், வீடு களிலும் பாதுகாப்பின்றி செயல்படுகின்றன. அரசின் சுகாதார சான்றிதழ், பொதுப்பணி துறையின் கட்டட உறுதி சான்றிதழ், தீயணைப்பு சான்றிதழ் போன்ற அடிப்படையான தகுதி ஆவணங்களைக்கூட, பல பள்ளிகள் பெறுவதில்லை. எனவே, இந்த விஷயத்தில் நிலைமை சரிசெய்ய பள்ளிக் கல்வித்துறை களமிறங்கியுள்ளது.

முதற்கட்டமாக, தமிழகம் முழுவதும் நர்ஸரி மற்றும் இளம் மழலையர்(பிளே ஸ்கூல்) பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் அரசின் சான்றிதழ்களை ஆய்வுசெய்ய, வட்டாரக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக முதன்மைக் கல்வி அலுவலர்களின் மேற்பார்வையில், இந்தப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மாவட்டக் கல்வி அலுவலர்களின் ஆய்வுக்குப் பின், அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பட்டியல், தொடக்கக் கல்வி இயக்குனரகத்திடம் வழங்கப்படும்.

அதன்படி, அப்பட்டியலில் இடம்பெற்ற பள்ளிகளை, இந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிரந்தரமாக மூடவும், அவற்றின் நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று தொடக்கக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

More articles

Latest article